அரசு உரிய விலை கொடுத்தால் மட்டுமே ஆவின் நிறுவனம் காப்பாற்றப்படும் - தமிழக விவசாயிகள் சங்கம்
தமிழகத்தில் 12 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை தற்போது 9,763 பால் கூட்டுறவு சங்கங்களாக குறைந்துவிட்டது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலில் பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு 42 ரூபாயாகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு 52 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மாதம் 28 ஆம் தேதி கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் மாற்றம் காரணமாக அந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அமுல் நிறுவனம் தமிழகத்தில் கால் பதித்துள்ளது. இந்த நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு அதிக விலை கொடுப்பதாலும், உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாலும் இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் வரவேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.
இந்த நிலையில் அரசு உரிய விலை கொடுத்தால் மட்டுமே ஆவின் நிறுவனம் காப்பாற்றப்படும் என்றும், இல்லையேல் விவசாயிகள் தனியார் நிறுவனத்தை நாடி செல்வதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ள உழவர் தின மாநாட்டில் தமிழகம் தழுவிய போராட்டம் அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமுல் நிறுவனம் தமிழகத்திற்கு வருவதற்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்த சுந்தரம் ஆவின் நிர்வாகம் சரியில்லாத காரணத்தால் தமிழகத்தில் இருந்த 12 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை தற்போது 9,763 பால் கூட்டுறவு சங்கங்களாக குறைந்துவிட்டது என்றார். இதே நிலை நீடித்தால் பால் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து தமிழக அரசுக்கு அவ பெயர் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார் அதே நேரத்தில் அமுல் நிறுவனம் விவசாயிகளுக்கு அதிக பணம் கொடுப்பதுடன் குறைவான விலைக்கு தான் பால் விற்பனை செய்கின்றனர் என்றும் அந்த நிறுவனத்தில் எந்த ஒரு அரசியல் கலப்படமும் இல்லை என்றும் அவர் கூறினார்.