Anna Birthday : அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்..! 75 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு விடுதலை..!
நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்கு உள்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும், சிறைகளில் நீண்டகாலமாக உள்ள கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை வழங்கப்படுவது வழக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
75 பேர் விடுதலை
இதனையடுத்து முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் மற்றும் 75வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன்படி, புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய சிறை 5, சேலம் மத்திய சிறை 1, கோவை மத்திய சிறை 12, திருச்சி மத்திய சிறை 12, மதுரை மத்திய சிறை 22, திருச்சி பெண் சிறை 2, புழல் பெண் 2 புதுக்கோட்டை சிறை 4 பேர் என மொத்தம் 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நன்னடத்தை விதிகளின்படி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் அறிவிப்பு
நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்கு உள்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து இந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அண்ணாவின் 113வது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சிறைவாசத்தில் இஸ்லாமியக் கைதிகள்
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலை தொடர்பாகவோ, அதே போல 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவை சிறையில் உள்ள 38 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பது தொடர்பாகவோ திமுக அரசு எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
அரசாணை
சிறைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.