Cuddalore: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த 160 தோட்டாக்கள்.. போலீசார் தீவிர விசாரணை..!
கடலூர் மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை கர்நாடகாவில் தொடங்கி தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு செல்கிறது.
இங்கு நேற்று சிறுவர்கள் உட்பட சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் இறால் மீனை கையில் பிடிக்க ஆற்றுக்குள் கைவிட்ட நிலையில், அவனது கையில் சில துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த துப்பாக்கி தோட்டாக்களை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு பணியில் இருந்த காவல் துறையினரிடம் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தோட்டாக்கள் கிடைத்த இடத்தை சோதனை செய்தபோது மேலும் ஏராளமான தோட்டாக்கள் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பகுதி முழுவதுமாக தொடர்ச்சியாக சோதனை நடத்தியதில் கிட்டதட்ட 160 தோட்டாக்களை கைப்பற்றப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் ராஜாராம், ‘தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த தோட்டாக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தோட்டாக்களில் மண் படிந்திருப்பதால் அவற்றை முழுமையாக பரிசோதிக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் பிறகு தான் அந்த தோட்டாக்கள் எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். இந்த தோட்டாக்கள் அனைத்தும் ஏர் பிஸ்டல், ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது இவை அனைத்தும் இதுவரை பயன்படுத்தாத தோட்டாக்களாக உள்ளது’ என கூறினார்.
இதனிடையே இன்று காலை மீண்டும் அதே இடத்தில் 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆயுத குவியல் ஏதேனும் இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் நீச்சல் வீரர்களை கொன்று தேடுதல் பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் தென்பெண்ணை ஆற்றில் மீனவர் வீசிய வலையில் ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Police Suicide: "நான் போறேன் மா..." ஆவடி ஆயுதப்படை காவலர் சேலத்தில் தற்கொலை... தாய்க்கு உருக்கமான கடிதம்..!