Police Suicide: "நான் போறேன் மா..." ஆவடி ஆயுதப்படை காவலர் சேலத்தில் தற்கொலை... தாய்க்கு உருக்கமான கடிதம்..!
சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றிய இளைஞர் சொந்த ஊரான சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ். 21 வயதான இவர் சென்னை அடுத்த ஆவடி ஆயுதப்படை 2ம் அணியின் காவலராக பணிபுரிந்து வந்தவர். 2022 ஆம் ஆண்டு பேட்ஜ் காவலர் ஆவார். இவர் கடந்த 31 ஆம் தேதி முதல் 30 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மலைக்கொண்டான் சென்று உள்ளார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆயுதப்படை காவலர் தற்கொலை:
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து அன்புராஜ் குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாயில் நுரை தள்ளியபடி அவரை நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்புராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பணி சுமை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புராஜ் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அவரது தாய்க்கு அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், "போறேன் மா. நான் இத்தனை நாள் வாழ்ந்ததே உனக்காகதான். எனக்கு என்ன ஆச்சுணு தெரியல். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இத எப்படியும் யாராவது உங்கிட்ட படிச்சு காட்டுவாங்க. நான் யார்கிட்டையும் சொல்லாம போய்டலாம் என்று தான் நினைச்சேன். அப்புறம் எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க. என் மனம் அறிந்து யாருக்கும் கெட்டது செஞ்சதுல்ல...! என் தலைக்குள்ள ஏதோ ஓடிட்டு இருக்கு என்னால control பன்ன முடியல. வெளியே எங்கேயும் போக மாட்டேன் மா. கூடவே தான் இருப்பேன். அதுக்காகதான் வீட்டுக்கு வந்தேன்".
பெரும் சோகம்:
"ஒருவன் நல்லவன் என்பதற்கு அர்த்தம் அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது" என்றும் எழுதியுள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த காவலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)