Breaking | உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணையால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர்ப் பாசனமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி விட்டது.
எனவே, மார்க்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர் செல்ல விடாமல் தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பேபி ராணி மெளரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்ததால் டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேகதாது விவகாரம்: எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தத் திட்டம் வந்தால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என்றும் மேலும் அணைகட்டும் விவகாரத்தில் பல விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் குடிநீர் தேவைக்காகத்தான் அணைதிட்டம் என்கிற காரணத்தை ஏற்கமுடியாது என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.