(Source: ECI/ABP News/ABP Majha)
Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சேலம் கோட்டத்தில் இருந்து 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்
தனியார் பேருந்து ஓட்டுநர்கள், டெம்போ ஓட்டுநர்கள் போன்ற இதர ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகளை இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் என அண்ணா தொழிற்சங்கம் எச்சரிக்கை.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற் சங்கம், சிஐடியு உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொமுச தொழிற்சங்க நிர்வாகிகளை கொண்டு பேருந்துகள் இயக்கும் நடவடிக்கையில் அரசு போக்குவரத்து கழகம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் காலை 5 மணி நிலவரப்படி 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுடைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்கள் செல்லும் பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருவதாக சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார்.
இருப்பினும் இன்று காலை முதல் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுடைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் இயக்குவதற்கு ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனாலும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி சொந்த மாவட்டங்களுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் செல்லும் பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும், கூடுதல் ஓட்டுநர் நடத்துனர்களைக் கொண்டு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக சேலம் அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் கோட்ட பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும்பொறை போராட்டமானது தொடரும் என்று தெரிவித்தனர். மேலும் அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோது 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவது எப்படி? தனியார் பேருந்து ஓட்டுநர்கள், டெம்போ ஓட்டுநர்கள் போன்ற இதர ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகளை இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் என அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் திரளான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.