CM Inspection In Mettur Dam : திறக்கப்பட்ட மேட்டூர் அணை.. டெல்டாவில் ஆய்வுக்காகப் புறப்பட்ட முதலமைச்சர்.. முழு விவரம்..
டெல்டா மாவட்டங்ளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர்வழித்தடங்கள் தூர்வாரும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதல் இரண்டு நாள்கள் ஆய்வு செய்கிறார்.
டெல்டா மாவட்டங்ளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர்வழித்தடங்கள் தூர்வாரும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதல் இரண்டு நாள்கள் ஆய்வு செய்கிறார்.
முன்கூட்டியே திறக்கப்பட்ட அணை:
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிப் பருவம் தொடங்கியுள்ளது. குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12ம் தேதி திறந்து வைத்தார். ஆனால் இம்முறை நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை மே மாதமே 110 அடியை தாண்டியது. அதனால் ஜூன் மாதம் திறக்கப்படவேண்டிய தண்ணீர் மே 24ம் தேதியே திறக்கப்பட்டது. சுதந்திரமடைந்ததற்குப் பிறகு மேட்டூர் அணை மே மாதமே திறக்கப்படுவது இதுவே முதல் முறை.
மேட்டூரில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்காக வாய்க்கால்கள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் தூர் வாரும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்காக டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் தூர்வாரும் பணியானது ரூபாய் 80 கோடி செலவில் கடந்த 1ந் தேதி துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விரைவுபடுத்தப்பட்ட தூர்வாரும் பணிகள்:
இதுவரை சுமார் 4000 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளது. மேலும் 900 கிமீக்கு மேல் தூர் வாரவேண்டியுள்ளது. இதனால் தூர் வாரும் பணிகளுக்காக பொக்லைன் இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 1200.56 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிக்காக ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு:
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை இன்று முதல் இரண்டு நாள்கள் நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று மதியம் விமானம் மூலமாக திருச்சி கிளம்பிய அவர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி செல்கிறார். அங்கு தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்யும் அவர் இரவு வேளாங்கண்ணியில் தங்குகிறார்.
நாளை காலை கல்லார், தரங்கம்பாடி, திருவாரூர், காட்டூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். அன்று மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.