மின் கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்; ரூ. 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிப்பு
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தால் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத் துறை தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதேபோன்று மின்சார கட்டணத்தையும் சேர்த்து, சோலார் மேற்கூரை கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் குறிப்பாக அரிசி ஆலைகள் மற்றும் அச்சகங்கள் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, அயோத்தியாபட்டினம் பகுதிகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு அரிசி ஆலைகள் 13 பெரிய அரிசி ஆலைகள் என அனைத்தும் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அரிசி ஆலைகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க உதவி தலைவர் உதயகுமார் கூறுகையில், அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு தங்களது தொழிலை பெருமளவு பாதிக்கும். மின்கட்டண உயர்வை பரிசீலனை செய்யக்கோரி மின்சார துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு பலனும் இல்லை என்று கூறிய அவர், இந்த மின்கட்டணம் உயர்வால் தாங்கள் உற்பத்தி செய்யும் அரிசிக்கு விலை உயர்வு ஏற்படும் என்றார். இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு உடனடியாக புதிய மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றார். இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தால் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள் போன்று பலதரப்பு மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளதாக கூறினார்.
அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இன்று தினம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த சேலம் மாவட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் அசோசியேசன் நிறுவனர் முத்து கோபாலகிருஷ்ணன், பரபரப்பு நேர கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான தனி அளவீட்டு கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்றும் அந்த நேரத்தில் தொழிற்சாலைகள் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் குத்து மதிப்பாக 25 சதவீதம் கூப்பிடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.