மேலும் அறிய
விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதி இல்லாத தருமபுரி மலை கிராமங்கள்...!
’’பெண்கள் மலை கிராமத்தில் உள்ள தொடக்க கல்வி அல்லது உயர்நிலை கல்வி முடித்தவுடன் நிறுத்தி விடுகின்றனர்'’

மலைகிராமம்
சேலம் -தருமபுரி மாவட்ட எல்லைகளாக கொண்டுள்ள சேர்வராயன் மலைத் தொடரின் ஏற்காடு மலை பின் பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குபட்ட சுமார் 60 கிராமங்கள் ஏற்காடு மலை பின்பகுதியில் அமைந்துள்ளது. இதில் தருமபுரி மாவட்ட எல்லையில் வேப்பாடி கோயில் பாடி, கரடியூர், நாகலூர், செம்ம நத்தம், பெரிய காடு, மங்கலம், நாரஞ்சேடு, வல்லிகடை, புளியூர், மஞ்சக்குட்டை, புத்தூர், போளூர், கடுமரத்தூர், தாளூர், ஆளாக்காடு, சேரநாடு, வீராச்சியூர், பூமரத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும், இதுவரை மலை கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகளான சுகாதாரம், கல்வி, நல்ல குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாமலே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சுதந்திரம் அடைந்ததிலிருந்து பேருந்தை பார்க்காத ஒரு மலை கிரமங்களாகவே இருக்கின்றது. இங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காகவும் பணிகளுக்கும் தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள பொம்மிடி நகரத்திற்கு சுமார் 12 கிலோமீட்டர் தூரம் தங்களின் இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இல்லையெனில் சேலம் மாவட்டத்திற்கு சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஏற்காடு பகுதிக்குச் சென்று அங்கிருந்து பேருந்தின் மூலம் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேலத்தை சென்றடையும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலை கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டு இருந்தாலும், வனப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், அடிக்கடி மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இவை பத்து நாட்களுக்கு மேல் கூட மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி வரும் மலை கிராமங்களாக இருக்கின்றது. மேலும் காட்டு விலங்குகளால் அவ்வப்போது தங்கள் இன்னுயிரை இழக்கின்ற நிலையிலும் உள்ளனர்.

புதிய பள்ளிக் கூட வசதி இல்லாத காரணத்தினால், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலும் வெளி மாவட்டங்களுக்கு அல்லது வெளியூர் சென்று படிக்க இயலாமல், இவர்கள் இதுவரை எவ்வித அரசு பணிக்கும் செல்ல முடியாமல் இருக்கின்றனர். மேலும் பெண்கள் மலை கிராமத்தில் உள்ள தொடக்க கல்வி அல்லது உயர்நிலை கல்வி முடித்தவுடன் நிறுத்தி விடுகின்றனர். பேருந்து வசதி இல்லாததால், மேற்படிப்பு செல்ல விடுதிகளில் தங்க வேண்டியுள்ளது. இதனால் பெற்றோர்கள் பெண்களை படிக்க அனுப்புவதில்லை. போதிய கல்வி அறிவு பெறாத இம்மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரேஷன் அரிசியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான கிராம மக்கள் பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு மாவட்டங்களுக்கும் சென்று விடுகின்றனர். அதனால் மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகவே மலை கிராம மக்களுக்கு உள்ளது. கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கின்ற நிலையே இன்று வரை நீடிக்கிறது. சில நேரங்களில் போக்குவரத்து வசதி இல்லாததால் தூளி கட்டி அல்லது இரு சக்கர வாகனங்களில் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லுகின்ற ஒரு அவல நிலை இருந்து வருகிறது.

மேலும் குளிர்ந்த பிரதேசமாக இருக்கும் இந்த ஏற்காடு மலை பிரதேசத்தில் விவசாயத்தை பிரதானமாக செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள், சிறுதானியங்களை விற்பனை செய்ய எடுத்து செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால், அதிக வாடகை கொடுத்து ஆட்டோக்களில் எடுத்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். மலை பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு போதிய வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். தருமபுரி பொம்மிடி வழியாக ஏற்காடு சுற்று தளத்திற்கு சாலை வசதி, போக்குவரத்து செய்து கொடுத்தால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனால் மலைவாழ் மக்கள் சிறு வியாபாரம் செய்து தங்களது வருவாயை பெருக்கி கொள்ள முடியும். ஆனால் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க இரு மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. மலை கிராமங்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை எவரும் அங்கு கிராமப்பகுதியில் எட்டிக்கூட பார்க்கவில்லை.

இங்கு செல்போன் டவர் இல்லை, அதனால் தொடர்பு கொள்ள முடியாத ஒரு நிலையும் இருந்து வருகிறது. எனவே ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்கையில் தமிழக அரசு ஒளியேற்றிட வேண்டும் என்பதே மலை கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
உலகம்
Advertisement
Advertisement