மோடி காலடியில் முதல்வர் மண்டியிட்டு கிடக்கிறார் - பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி..
பாஜகவை பொறுத்தவரை எல்லோரும் ஒருவருக்கு முன்னால் மண்டியிட்டு, தலைகுனிந்து இருக்கவேண்டும் என்ற சிந்தாந்தத்தை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தமிழகத்தில் இருந்துதான் ஆட்சி செய்யவேண்டும், டெல்லியில் இருந்து அல்ல என சென்னையில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல்காந்தி தெரிவித்தார். அடையாறில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் பேசிய ராகுல், ”மிகப்பெரிய பாரம்பரியத்திற்கு சொந்தமான தமிழினத்தின் முதலமைச்சர் பழனிசாமி, மோடி, அமித்ஷா முன்பு மண்டியிட்டு கிடப்பது தனக்குள் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், இருவரின் காலடியில் முதல்வர் விழுந்து கிடப்பதற்கு காரணம், அவர் செய்த ஊழலும் நேர்மையின்மையும்தான்” என குறிப்பிட்டார்.
”ஒரு மொழி இன்னொரு மொழியை விட மேம்பட்டது என்பதையும், ஒரு இனத்தின் பண்பாடு இன்னொரு இனத்தை காட்டிலும் மேலானது என்று சொல்வதையும் தான் ஏற்கவில்லை என்று பேசிய ராகுல், தமிழகத்தை விட்டுவிட்டு ஒருபோதும் இந்தியாவை குறிப்பிட்டுவிடமுடியாது” என்றும் கூறினார்.
பாஜகவை பொறுத்தவரை எல்லோரும் ஒருவருக்கு முன்னால் மண்டியிட்டு, தலைகுனிந்து இருக்கவேண்டும் என்ற சிந்தாந்தத்தை பின்பற்றுவதாகவும், ஆனால் தாங்களோ சமத்துவம், சகோதரத்துவம், அன்பு என்ற அதற்கு நேர்மாறான தூய சிந்தாந்தத்தை பின்பற்றுவதாகவும் பேசிய ராகுல், இந்த தேர்தலில் மக்கள் ஒருபுறமும், பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றொரு புறமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த முறை ராகுல்காந்தியின் மொழிபெயர்ப்பை சமீபத்தில் காங்கிரஸ் இணைந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் மொழிபெயர்த்தார்.