வேட்பாளர் ஒருவர், வேட்புமனு தாக்கல் செய்தவர் ஒருவர் : என்ன நடக்கிறது காங்கிரசில்?
விருத்தாச்சலத்தில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு பதில் வேறு நபர் காங்கிரஸ் வேட்பாளர் என்று மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வும் போட்டியிடுகின்றனர்.
விருத்தாச்சலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராதாகிருஷ்ணன் என்பவரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று நீதிராஜன் என்பவர் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், ராதாகிருஷ்ணன் தொகுதிக்கு தொடர்பில்லாத நபர். ஆனால், நான் தொகுதி மக்களுடன் நெருக்கமாக பல ஆண்டுகளாக தொடர்பில் உள்ளேன். இன்று நல்ல நாள் என்பதால் தொண்டர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். விரைவில் கட்சித் தலைமை என்னை விருத்தாச்சலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார். ராதாகிருஷ்ணன் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமை ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், திடீரென நீதிராஜன் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள விவகாரம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.