Aadhav Arjuna : “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
”2021 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் தன்னிடம் பேசியவர்தான் ஆதவ் அர்ஜூனா” - திருமாவளவன்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லையென்றால் வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றிருக்காது என்ற பரபரப்பு கருத்துகளை உதிர்த்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ அர்ஜூனா அந்த கருத்து தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனிடம் விளக்கம் அளித்திருக்கிறார். ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருமா பேசியிருந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா இந்த விளக்கத்தை திருமாவளவனிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆதவ் அர்ஜூனா அளித்த விளக்கம் என்ன ?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ள ஆதவ் அர்ஜூனா, தனக்கு திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையே கருத்து மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லையென்றும், அதிகார பரவல் வேண்டும் என்று கேட்பதே தவறா ? என்று சொல்வதற்காகதான் நேர்காணலில் அப்படி பேசியதாகவும் திமுகவுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லையென்றும் ஆதவ் அர்ஜூனா திருமாவிடம் விளக்கம் அளித்திருக்கிறார். அப்போது திருமா, ஆதவ் அர்ஜூனாவிடம் இது ஒரு Prematured approach என்றும் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கும்போதே இப்போதே இது குறித்து பேசத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு ஆதவ், தான் திட்டமிட்டு பேசவில்லை என்றும் பலரும் தெரிவித்த கருத்துக்கு பதில் மட்டுமே கொடுத்ததாகவும் திருமாவிடம் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கையா ?
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியுள்ளதற்கு கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், ”ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆ.ராசா சொன்னது நிபந்தனை அல்ல, அது ஒரு பரிந்துரைதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகிறது என்றும் தன்னிடம் மனம் திறந்து பேசுவதுபோல் மற்ற நிர்வாகிகளிடம் ஆதவ் இன்னும் பேசத் தொடங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன், ஆதவ் அர்ஜூனா கட்சி நலன் என்ற அடிப்படையில் மட்டுமே பார்த்து அவர் கருத்து தெரிவித்து வருவதாகவும் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் போன்றோர் எல்லாம் ஏன் உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கூட்டணி நலன் முக்கியம் என்று பார்ப்பதால்தான் என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனாவிற்கு உள்நோக்கமா ? – திருமா சொன்னது என்ன ?
மேலும், இது போன்ற கருத்துகளை நேர்காணல்கள் மூலம் ஆதவ் அர்ஜூனா வெளிப்படுத்தியதை வைத்தே அவருக்கு உள்நோக்கம் இருக்கிறது, கிரிமினல் இண்டன்ஷன் இருக்கிறது என நான் அவரை மதிப்பீடு செய்யவில்லை என தெரிவித்திருக்கும் திருமா, 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக சார்பாக ஆதவ் அர்ஜூனாவும் சபரீசனும் தன்னை அழைத்து தொகுதிகளின் எண்ணையை குறைத்துக்கொள்ளும்படியும் அதற்கான தீர்க்கமான காரணங்களையும் விளக்கினார்கள் எனவும் திருமா குக்றிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நிர்வாகிகள் மத்தியில் ஒரு குழப்பதை சிலர் உருவாக்க நினைப்பதாகவும் ஆனால் அப்படியான குழப்பத்தை அவர்களால் உருவாக்க முடியாது எனவும் திருமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்