Budget 2024: பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டுவதா? நாடாளுமன்றத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
மத்திய பட்ஜெட்டில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் பாரபட்சமாக நிதி ஒதுக்கியதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நேற்று இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைப்பு, ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் உதவி உள்ளிட்ட திட்ட அறிவிப்புகள் இருந்தாலும், மாநில வாரியாக பார்க்கும்போது பல மாநிலங்களுக்கான திட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லை.
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம்:
குறிப்பாக, மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு திட்டங்கள் அதிகளவில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற மாநிலங்களுக்கு குறிப்பாக பா.ஜ.க. ஆளாத மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் இல்லாத இந்தியா கூட்டணி கட்சி செய்யும் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை.
இதனால், நேற்றே பட்ஜெட் தாக்கலின்போது தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆவேசம் அடைந்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகம் என பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக பல தலைவர்களும் விமர்சித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
நிதி ஆயோக் கூட்டமும் புறக்கணிப்பு:
இதையடுத்து, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பட்ஜெட்டில் போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து மத்திய அரசு நடத்த உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய பட்ஜெட்டை விமர்சித்ததுடன் தி.மு.க. எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்ததுடன், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் அறிவித்தார்.
ஆந்திரா, பீகாருக்கு சிறப்பு அறிவிப்புகள்:
மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏனென்றால் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள மோடி அரசு நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவுடனே ஆட்சியை பிடித்துள்ளனர். இதன் காரணமாகவே, பட்ஜெட்டில் அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதியும், திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று பட்ஜெட் தாக்கலின்போது வௌளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்குவதாக என்று கூறியபோது, தமிழக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.