Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
தவெக தலைவரும், நடிகருமான விஜய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் சூழலில் சீமானை பெரியளவு கண்டு கொள்ளாமல் அரசியல் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் கடந்த சட்டமன்ற தேர்தலிலே இல்லாமல் தமிழகம் தேர்தலைச் சந்தித்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் கடும் போட்டியாக மாறியுள்ளது.
விஜயை விமர்சிக்கும் சீமான்:
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, தமிழ்நாடு அரசியல் சூடுபிடித்துள்ளது. தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டிலே விஜய் தங்களுடைய கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க. என்றும் கூறினார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறினார்.
நடிகர் விஜய்யை தொடக்க காலம் முதலே தனது தம்பி என்றும், அவரது அரசியல் வருகைக்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வந்தவர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். ஆனால், விஜய் பெரியாரை தனது கொள்கை தலைவராகவும், திராவிடமும் தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறியது முதலே சீமான் விஜயை மிகத் தீவிரமாக விமர்சித்து வருகிறார்.
திருமாவை இழுக்கப் பார்க்கும் விஜய்:
சீமானின் விமர்சனத்திற்கு நடிகர் விஜய் எந்தவொரு இடத்திலும் பதில் அளிக்காமலே தவிர்த்து வருகிறார். தி.மு.க.வை தனது தொடக்க காலம் முதலே மிக கடுமையாக விமர்சித்து வந்த சீமான், விஜய்யின் முதல் மாநாட்டிற்கு பிறகு விஜய்யையே பிரதானமாக விமர்சித்து வருகிறார். ஆனாலும், விஜய் சீமானின் கருத்து குறித்தும், சீமானின் விமர்சனம் குறித்தும் துளியும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக-வின் பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இருக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார். தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டில் திருமாவளவனின் நீண்ட நாட்கள் கோரிக்கையான ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி மறைமுகமாக திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்தார்.
சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனின் மனம் முழுவதும் இங்கேதான் இருக்கும் என்று விஜய் வெளிப்படையாக கூறியது தி.மு.க.வை மேலும் எரிச்சலூட்டியது. அரசியல் கட்சி தொடங்கியது சீமானை துளியும் கண்டுகொள்ளாமலே விஜய் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். விஜய் – சீமான் கைகோர்ப்பார்கள் என்றே அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், தனது கூட்டணியில் திருமாவளவன் இருக்க வேண்டும் என்பதில் விஜய் தொடர்ந்து உறுதியாக உள்ளார்.
அப்செட்டில் அண்ணன் சீமான்:
அதேசமயம், தி.மு.க.வின் கூட்டணியை உடைப்பதிலும் விஜய் உறுதியாக உள்ளார். சீமானை விஜய் கண்டுகொள்ளாத காரணத்தால் நாம் தமிழர் நிர்வாகிகளும், சீமான் ஆதரவாளர்களும் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், ரஜினியை மிக கடுமையாக விமர்சித்து வந்த சீமான் திடீரென அவரைச் சந்தித்தது நாம் தமிழர் தொண்டர்கள் மத்தியிலே அதிருப்தியை ஏற்படுத்தியது. விஜய்யின் செயல்பாடுகள் வரும் சட்டமன்ற தேர்தலில் சீமானுடன் கூட்டணி அமைக்கமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், விஜய் நாம் தமிழர் கட்சியையும், தன்னையும் பெரியளவில் கண்டுகொள்ளாதது சீமானுக்கு சற்று ஆதங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் தமிழக அரசியலில் பெரியளவு திருப்பங்களையும், மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி.