TVK Anniversary: விஜய் கட்சியில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்.. அதிமுகவை அசைத்து பார்க்கிறாரா ?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைய உள்ளனர்.

அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சிக்கு தேவைப்படுவதால், முக்கிய நபர்களிடம் விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று இணைப்பு நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆண்டு விழா: TVK Anniversary
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை, விஜய் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. 2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என கூறி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்நிலையில் தான், த.வெ.க இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை போல பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் சொகுசு விடுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரசாந்த் கிஷோர்:
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் உடன், பொதுச்செயலாளர் என். அனந்த், தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். மேலும், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
கட்சியில் இணையும் முக்கிய நபர்கள்
விஜய் கட்சி ஆரம்பத்திலிருந்து பல்வேறு முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அதேபோன்று நடிகர்கள் பலரும் இணைய ஆர்வம் காட்டினர். விஜய் மக்கள் இயக்கமாக இருந்து, கட்சியாக வளர்ந்து இருப்பதால் முதலில் மக்கள் இயக்கத்தில் இருக்கும் பிரச்சனையை தீர்க்க விஜய் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பழைய நிர்வாகிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை ஓரளவிற்கு தீர்த்ததாக, விஜய்க்கு நிர்வாகிகள் தகவல் அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து புதிய நபர்களையும், இணைக்க விஜய் திட்டம் திட்டி உள்ளாராம். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சியில் இணைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் திட்டம் என்ன ?
தற்போது கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் பலருக்கும் தேர்தல் அனுபவம் என்பது கிடையாது. பலரும் முதல் முறையாக தேர்தலில் சந்திக்க இருப்பதால், அனுபவமிக்க நபர்கள் தேவைப்படுவதாக விஜய்க்கு ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்சியில் இணைக்க விஜய் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகிறாராம். இதேபோன்று நடிகர்களும் பலரும் விஜய் கட்சியில் இணை ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோன்று நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மையத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளும் விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சியில், ஐக்கியமாக உள்ளனர். அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் இணைவது, கட்சிக்கு நன்மை பயக்கும் என்பதால் நாளை, ஒரு சிலரின் நினைப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.