DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கே சிக்கலா? ஊசலில் உதயநிதியின் எதிர்காலம்? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
DMK Stalin: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கனவை, அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே கலைத்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

DMK Stalin: தமிழ்நாடு காவல்துறையினர் மீது குவியும் குற்றச்சாட்டுகள், சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஸ்டாலினின் கனவு:
கடந்த 2011ம் ஆண்டு படுதோல்வி அடைந்த திமுக, அதன்பிறகு 10 ஆண்டுகாலம் ஆட்சி கட்டிலில் ஏறாமுடியாமலேயே வனவாசத்தில் இருந்தது. ஜெயலலிதாவின் மறைவு, அதிமுக - பாஜக கூட்டணி, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களின் விளைவாக, 2021ம் ஆண்டு தேர்தலில் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதா அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் வென்றதை போன்றே, 2026 தேர்தலிலும் வென்று தொடர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் ஸ்டாலினின் தற்போதைய கனவாக உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை ஏற்கனவே முடுக்கிவிட்டு, 200 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என இலக்கும் நிர்ணயித்துள்ளார்.
உதயநிதியின் எதிர்காலம்:
மீண்டும் முதலமைச்சர் ஆகும் அதே காலகட்டத்திக்லேயே, திமுகவின் எதிர்காலம் உதயநிதி தான் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். தனக்கு பிறகு தனது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதே அவரது விருப்பமுமாம். அதற்கான சாட்சியாக தான், 2021ம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி, அடுத்தடுத்து அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என ஜெட் வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளாராம். இதே ரூட்டில் பயணித்து உதயநிதியின் எதிர்காலத்தை வளமாக கட்டமைக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது.
கனவை பொசுக்கும் காவல்துறை?
ஆனால், திமுக ஆட்சி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே உருவெடுத்து வருகிறது. சட்ட - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே பல குற்றங்களில் ஈடுபடுவது, குற்றங்களை மறைக்க உதவுவததும் திமுக ஆட்சிக்கு பெரும் களங்கமாக மாறி வருகிறது. இதன் மூலம், காவல்துறையை நிர்வகிப்பதில் ஸ்டாலின் கோட்டைவிட்டுவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறவேண்டும் என்ற ஸ்டாலினின் கனவை காவல்துறையே பொசுக்குவதாக அரசியல் வல்லுநர்கள் சாடி வருகின்றனர்.
ஸ்டாலினின் தூக்கத்தை கலைக்கும் காவல்துறை:
- சென்னை அருகே சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்புடையதாக, ஏடிஜிபி ஜெயராமன் சீருடையில் நீதிமன்றத்தில் வைத்தே கைது செய்யப்பட்ட நிகழ்வு காவல்துறைக்கே களங்கமாக மாறியுள்ளது
- திமுக ஆட்சியில் ஏற்கனவே லாக்-அப் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், சிவகங்கையில் அஜித்குமார் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, உதவி காவல் ஆய்வாளர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- திருவள்ளூர் கனகம்மாசத்திரத்தில் புகாரளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணை தாக்கியதாக, கடந்த மாதம் தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்
தேர்தல் தலைவலி
இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களில் அரங்கேறியவை ஆகும். கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் காவல்துறையின் செயல்பாட்டை கருத்தில் கொண்டால், ஏராளமான குற்ற வழக்குகளில் காவல்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி, தமிழ்நாட்டில் அமைதி மற்றும் சட்ட-ஒங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே கட்டுப்பாடின்றி, குற்றச் செயல்களில் ஈடுபடுவது முதலமைச்சர் ஸ்டாலினின் தூக்கத்தை கலைக்கும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கனவையும் குழி தோண்டி புதைக்கும் காரணியாகவும் மாறி வருகிறது. கூடுதலாக, உதயநிதி மீதான எதிர்கால திட்டங்களும் கேள்விக்குறியாகக்கூடும்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருப்பதாகவும், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சகட்டுமேனிக்கு அரங்கேறி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் செயல்பாடும் மோசமாகி மாறி வருவது, தேர்தல் பரப்புரையின் போது திமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















