G.K.Vasan: "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறது தமாகா" : ஜி.கே.வாசன் பேட்டி.
தனித்தனியே தேர்தல் நடத்துவதால் நாட்டிற்கு பெரிய அளவில் பொருளாதார செலவு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பொருளாதார இழப்பு தவிர்க்கப்பட்டு நாடு வளர்ச்சிப் பெறும் கூறினார்.
அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் திருமணிமுத்தாறு திருவிழா சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திருமணி முத்தாற்றினை காப்பதில் விவசாயிகளின் பங்களிப்பினை உணர்த்திடும் வகையில், விவசாயிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய திருமணிமுத்தாற்றின் இன்றைய நிலை வேதனையளிக்கிறது. சேலத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த திருமணிமுத்தாற்றினை, சாக்கடை கழிவுகளில் இருந்து மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இருக்கும். இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், மாநிலங்களவையில் குரல் கொடுக்கவும் உள்ளேன். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக களம் இறங்க வேண்டும்" என்றார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியது. "சேலம் விமான நிலைய விரிவாக்கத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து அரசுக்கு தவறான தகவல்களை, விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். கோவை விமான நிலைய விரிவாக்கத்தின் போது வழங்கியது போல, சந்தை நிலவரப்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.2 கோடி, வீடுகளை இழப்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டிடும் வகையில் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். தலைவாசல் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரம் டன் காய்கறிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் அங்கு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். தலைவாசல் கால்நடை பூங்காவினை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மத்தியில் எந்த அரசாக இருந்தாலும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில், மத்திய அரசின் நேரடித் திட்டம், பங்களிப்பு திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது. நாடே மத்திய அரசின் பின் நிற்கும்போது, ஒரு சிலர் மட்டும் மாற்றுக் கருத்துடன் இருப்பதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக மத்திய அரசின் திமுக அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டில் குறை சொல்லி வருகிறது.
இலங்கையில் வாக்காளர்கள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். புதிய அதிபரும் இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவை பேண வேண்டும. இலங்கைக்கு நெருக்கடியான நேரங்களில் இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. மீனவர் பிரச்சினையில் இருநாட்டு அரசுகளும் கலந்து பேசி உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். இலங்கை கடற்படை நமது மீனவர்களை தாக்குவது, அவமானப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. தனித்தனியே தேர்தல் நடத்துவதால் நாட்டிற்கு பெரிய அளவில் பொருளாதார செலவு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பொருளாதார இழப்பு தவிர்க்கப்பட்டு நாடு வளர்ச்சிப் பெறும். இதேபோன்று அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் நிறைவேற்றும் நிலை உருவாகும். அரசியலில் விருப்பு வெறுப்பு குறைந்து மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் உருவாகும். தங்கள் கட்சியின் பலம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என நினைப்பவர்கள்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கிறார்கள்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.