கர்நாடக மசூதி புனரமைப்பில் கிடைத்த கோயில் தடயங்கள்.. வெற்றிலை தடவி பூஜை நடத்திய இந்து அமைப்புகள்!
கர்நாடகாவில் மசூதி புனரமைப்பின் போது, அதன் அடியில் கோயிலைப் போன்ற கட்டிடம் ஒன்று இருந்தது தெரிய வந்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அப்பகுதியில் `அஷ்டமங்களப் பிரஷ்ணம்’ பூஜையை மேற்கொண்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டதால், அதனைக் கோயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் விசாரித்துள்ள நிலையில், அதே போன்ற மற்றொரு சர்ச்சைக்குரிய விவகாரம் கர்நாடகாவில் நடந்து வருகிறது. கர்நாடகாவின் மங்களூர் பகுதியின் மலாலி மசூதி இடிக்கப்பட்ட போது, அதன் அடியில் கோயிலைப் போன்ற கட்டிடம் ஒன்று இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று அந்தக் கோயில் கிடைத்த பகுதியில் `அஷ்டமங்களப் பிரஷ்ணம்’ என்ற பூஜையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்தும் `அஷ்டமங்களப் பிரஷ்ணம்’ என்ற பூஜையின் மூலம், அந்த வளாகத்தில் கோயில் இருந்து, இடிக்கப்பட்டு, மசூதியாக மாற்றப்பட்டதா எனக் கண்டுபிடிக்க முடியும் எனக் கூறியுள்ளனர். மங்களூருவின் மலாலி மசூதி புனரமைப்புக்காக தோண்டப்பட்ட போது, இந்தக் கட்டிடம் புதைந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்து அமைப்புகள் இந்தக் கட்டிடத்தைக் கோயில் எனக் கூறி வருகின்றனர். அதே போல, மசூதி புனரமைப்புப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கிளை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என கர்நாடக பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பரத் செட்டி, `மக்கள் தங்கள் நம்பிக்கையின்படி, சட்ட நடவடிக்கை தேவையா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள அஷ்டமங்களப் பிரஷ்ணம் பூஜை நடத்தக் கோருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் இந்த விவகாரம் குறித்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மலாலி பகுதி மக்கள் இதனைக் கோயில் எனக் கூறுகின்றனர். அதன் வெளிப்புறமும் கோயில் என்றே தெரிகிறது. எனவே ஆய்வு தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து `அஷ்டமங்களப் பிரஷ்ணம்’ பூஜைக்காக இன்று பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் முதலான அமைப்பினர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிடர் கோபாலகிருஷ்ண பணிக்கர் என்பவரை அழைத்து வந்து நடத்தியுள்ளனர். இதில் வெற்றிலையின் மை தடவப்பட்டு, அந்தப் பகுதியில் கோயில் இருந்ததா, வேறு என்ன இருந்தது என்று கேள்வியின் மூலம் பூஜை நடத்தப்பட்டது. அப்போது அவர் முன்பொரு காலத்தில் அந்த இடத்தில் ஒரு குருமடம் இருந்ததாகவும், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்ததால் அங்கிருந்து அந்த இடம் அடியோடு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், `அவ்வாறு மாற்றப்பட்ட போது விட்டுச் செல்லப்பட்ட தடயங்கள் தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனை ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அந்தக் கிராமத்திற்கு பிரச்சினை உருவாகும்’ எனவும் கூறியுள்ளார்.
இந்த சிறப்பு பூஜை நடைபெறுவதற்காக அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.