ADMK: எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் - அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி
எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அவரது ஆதரவாளர்களும் இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிரந்தர பொதுச்செயலாளர்:
இதையடுத்து, அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ எடப்பாடி பழனிசாமி இனி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர். இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும். இந்த தீர்ப்பு மகத்தான, வெற்றிகரமான தீர்ப்பு.
இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு ஓர் எடுத்துக்காட்டு. அ.தி.மு.க. ஒருங்கிணைந்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அ.தி.மு.க. உள்ளது. 99 சதவீத நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் உள்ளனர். பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக தலைமை கழகம் முடிவு செய்யும்” என்றார்.
ஆதரவான தீர்ப்பு:
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கைப்பற்றப்பட்ட பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாவும், பின்னர் நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் வந்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனால், அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் வசம் சென்றது.
ஜெ பிறந்தநாள்:
உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்ததை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில், இன்று ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார், மேலும், தொண்டர்களுக்கு கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க: Jayalalithaa Birthday: ஜெயலலிதாவின் 75வது பிறந்தாள்..! 75 கிலோ கேக்கை வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி..!
மேலும் படிக்க: J Jayalalithaa: அன்பு.. ஆளுமை.. அதிகாரம்: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்.. வாழ்க்கை பயணம் ஓர் அலசல்..