’மாநில முதலமைச்சர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது’ - நயினார் நாகேந்திரன் பேட்டி.
கூட்டணி குறித்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அதன்படி நடக்கும், இதில் அண்ணாமலை கருத்திற்கு எந்த முரண்பாடும் கிடையாது.
சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டனர். இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழகத்திற்கு பிரதமர் வழங்கும் அனைத்து திட்டங்களும் முக்கியமானவை தான். கடந்த முறை வந்தபோது, 30 ஆயிரம் கோடிக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்த முறை வந்தபோது 5000 கோடிக்கு நல திட்டங்களை வழங்கினார். இதில் ரயில், சாலை உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி தமிழகத்தின் மீது மத்தியஅரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
நாளை மறுதினம் டெல்லியில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக தமிழை போற்றும் வகையில், விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார். இதுவரை யாரும் செய்ய முடியாத நினைக்காத காரியத்தை கூட, ஒவ்வொரு துறையிலும் முன்னோடியாக உள்ளார்களை கண்டுபிடித்து தமிழர்களை பெருமை சேர்ப்பதில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகர் அவர்தான் என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழக அரசை பொறுத்தவரை நிறைய திட்டங்கள் போடுகிறார்கள். அது நடைமுறை வருவதற்கு சிரமம் உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் சபாநாயகர் பேசுவதற்கு அனுமதிக்கிறார்களா என்ற கேள்விக்கு, குறை நிறை இரண்டையுமே சொல்ல வேண்டும், சில நேரங்களில் குறுக்க பேசுவது உண்மைதான். இருப்பினும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். திமுகவிற்கு கொடுப்பது போல், அதிமுகவின் துணைக் கேள்விக்கும் என அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
அதிமுக கூட்டணி விவகாரத்தில் அவசரப்பட்டு வார்த்தை விடுகிறாரா என்ற கேள்விக்கு, அண்ணாமலை எப்பொழுதும் அவசரப்பட்டு வார்த்தையை விட்டது கிடையாது. எப்போதும் அகில இந்திய தலைமையும், மாநில தலைமையும் சேர்ந்து கூட்டாக முடிவு எடுக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை பொறுத்தவரை நடந்த விஷயம் அவருக்கு ஒவ்வாத விஷயம். உதாரணமாக ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது அப்படிப்பட்ட விஷயத்தில் இருந்தாரே தவிர, அண்ணாமலைக்கு வேற எந்த உள்நோக்கமும் கிடையாது என்று கூறினார். பாஜகவை கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டால் உடனே கைது செய்கிறார்கள், ஆனால் ஆ.ராசா பேசுவது குறித்து பாஜகவினர் மனு கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார். கூட்டணி கட்சியை பொருத்தவரை அண்ணாமலையுடைய நிலைப்பாடுதான், என்னுடைய நிலைப்பாடு என்னுடைய நிலைப்பாடு தான் அண்ணாமலையுடைய நிலைப்பாடு அதில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்று தெரிவித்தார்.
கர்நாடக தேர்தலில் அதிமுகவிற்கு சீட்டு ஒதுக்குவது குறித்து அந்த மாநிலத்தின் பாஜகவின் தலைமையும் அதிமுகவும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று என்று கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று கூறினார்கள். இந்த முறை 500 கடைகளை மூடுவதாக கூறியிருந்தால் அதை செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆளுநருக்கு ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கு காலக்கெடு குறித்து மற்ற மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் குறித்த கேள்விக்கு, இதுகுறித்து மாநில முதலமைச்சர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது, தெரிந்திருந்தும் தமிழக முதலமைச்சர் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஏன் என்று தெரியாது என்றார்
அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்விக்கு, கூட்டணி குறித்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அதன்படி நடக்கும், இதில் அண்ணாமலை கருத்திற்கு எந்த முரண்பாடும் கிடையாது. தேசிய தலைமை சொல்வதை மாநில தலைமை ஏற்றுக் கொள்ளும், மாநில தலைமை சொல்வதை தேசிய தலைமை ஏற்றுக் கொள்ளும் எனவும் கூறினார். பாஜக மாநில தலைமை குறித்த கேள்விக்கு, அதுதான் அண்ணாமலை கூட்டணி உண்டு என்று கூறிவிட்டார். பாஜக மத்திய, மாநில தலைமையில் மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. பத்திரிகையாளர்கள் தான் பெரிதுபடுத்துகிறார்கள் எனவும் பேசினார்.