Sasikala : ’அதிமுக-வை கைப்பற்றும் வழித் தெரியாமல் தடுமாறும் சசிகலா’ திக்குத் தெரியாமல் தி.நகர் வீட்டில் திணறல்..!
தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போன பிறகு இரட்டைத் தலைமைக்கு எதிராக பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்று நினைத்த சசிகலாவின் எதிர்பார்ப்பிலும் மண் விழுந்தது
’நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுக-வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து, விவேகமாக இருந்து, அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட, நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து பிரார்த்தனை செய்கிறேன்’ என கடந்த மார்ச் 3ஆம் தேதி அறிக்கைவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினார் சசிகலா. ஆனால், அவர் நினைத்ததைபோன்று அதிமுக ஆட்சி அமையவில்லை ; உண்மையில் அவர், தான் இல்லாமல் அதிமுக ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று தான் நினைத்தார்.
அவர் கடிதத்தில் எழுதியதுபோல அதிமுக ஆட்சி மீண்டும் அமையவில்லை. ஆனால், அவர் நினைத்ததை காட்டிலும் அதிக தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது அதிமுக. சசிகலா-வால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ஜெயலலிதாவும் இல்லை தானும் இல்லை எனும்போது அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது எரிச்சலை உண்டாக்கியது அவருக்கு. இனி. இப்படியே விட்டால் ஒருநாளும் தன்னால் அதிமுகவை கைப்பற்றவே முடியாது என கணக்குபோட்டார். என்ன செய்வது என நினைத்து கைகளை பிசைந்து கணக்குப்போட்டார். நிர்வாகிகள்-தான் தன் பக்கம் இல்லை, தொண்டர்கள் அனைவரும் என் பக்கமே இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நினைத்தார். அதன்படி, சிறையில் இருக்கும்போதும் வெளியில் வந்து தி.நகர் இல்லத்தில் தங்கியிருக்கும்போதும் கடிதம் எழுதியவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி, ஒவ்வொருவருக்கும் தானே அழைத்து பேசினார். அப்படி பேசியவர்களிடம் ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோக்களை அவரே வெளியில் கசியவிட்டார். அதற்கென அவரது உதவியாளர் கார்த்தி மூலம் சின்னம்மா என ஒரு வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு, அதில் செய்தியாளர்கள் இணைக்கப்பட்டு ஆடியோ பகிரப்பட்டது. ஒன்று, இரண்டு என ஆடியோ வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது அதனை ஊடகங்களும் பெரிதாக எடுத்துக்கொண்டு, போட்டிப் போட்டிக்கொண்டு வெளியிட்டன. நாளடைவில் ஒரு நாளைக்கு பத்து பதினைந்து என சசிகலா பேசி, ஆடியோ வெளியிட்டபோது அந்த குழுவில் இருந்தவர்களுக்கே அது அயர்ச்சியை உண்டாக்கியது.
சசிகலாவிடம் பேசிய அதிமுகவினர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது அதிமுக. எத்தனை தொண்டர்களை நீக்குவார்கள் என பார்ப்போம் என பதிலுக்கு பல ஆடியோக்களை மீண்டும் மீண்டும் வெளியிட்டார். சலிக்கவில்லை அதிமுக தலைமை, பேசியவர்களையெல்லாம் நீக்கியது, சசிகலாவிற்கு எதிரான நிலையில் அதிமுகவில் தக்க வைக்க அனைத்து மாவட்டங்களிலும் அவருக்கு எதிராக திடீர் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆடியோ வெளியிட்டுக்கொண்டிருந்த சசிகலா, ஒரு கட்டத்தில் தானே சலித்துபோய், வீடியோ பேட்டிகள் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், அதிலும் தீப்பொறி ஏதும் பறக்கவில்லை. தான் கற்றுக்கொண்ட வித்தைகள் அனைத்தும் ‘தீர்ந்துபோகுமோ’ என பயந்தார். அதன்பிறகு, அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோவிற்கு நேரடியாக சென்றார். அங்கு இருந்த எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்களும் அவரை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தனர். மதுசூதனன் மறைந்தபோது அவர் வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தினார். அதற்கும் அசையவில்லை அதிமுக தலைமை. சசிகலாவை ஒதுக்கி வைத்தது ஒதுக்கி வைத்தது தான் என உள்ளுக்குள் சபதம் செய்துக்கொண்டது.
ஆட்சி, அதிகாரம் இருக்கும் வரைதான் எல்லாம், தேர்தலில் தோற்றால் தானாக அதிமுக கலகலத்துபோய்விடு, தன்னிடம் எடப்பாடி பழனிசாமி திரும்பி வந்து கட்சியை ஒப்படைத்து கையெடுத்து கும்பிடுவார் என சசிகலா தொடக்கத்தில் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்தது எதுவும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கவில்லை அல்லது யாரும் அதனை நடக்கவிடவில்லை. அதனால், காய்களை ஒபிஎஸ் பக்கம் நகர்த்தினார், ஒபிஎஸ் மட்டும் எங்களை விட்டு பிரிந்துபோகாமல் இருந்திருந்தால், நான் சிறைக்கு போனபோது அவரைதானே முதல்வர் ஆக்கிவிட்டு போயிருப்பேன் என திரியை கொளுத்தி தனது ஆடியோ மூலம் அந்த பக்கம் வீசினார்.
அசருவார் என நினைத்த ஒபிஎஸ் அமைதிக்காத்தார். அதிமுகவின் சர்வ வல்லமை படைத்த தலைவராக எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். ஒபிஎஸ் இப்போதும் ‘டம்மி’யாகவே வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் எல்லாம் கச்சைக் கட்டி பறந்தபோது, தன்னுடைய மருமகனை மட்டும் கூட்டிக்கொண்டு டெல்லி பறந்தார் அவர். அதே நாளில் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆஸ்தான முன்னாள் அமைச்சர் வேலுமணி சசிதமாக டெல்லி சென்றார். இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியையும், அமித் ஷாவை-யும் சந்தித்து பேசினர். அங்கு தான் ஏற்பட்டது அடுத்த திருப்பம்.
அதன்பிறகு, தேனியில் பேட்டிக் கொடுத்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஒரு தனிப்பட்ட நபரோ, குடும்பமோ ஆதிக்க செலுத்த முடியாத நிலையை அதிமுகவில் ஏற்படுத்தியிருக்கிறோம் என பேசி சசிகலாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இனி சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக பகிரங்கப்படுத்தினார் ஒபிஎஸ்.
தன்பக்கம் வருவார், அதிமுகவை கைப்பற்ற உதவியாக இருப்பார் என சசிகலா நினைத்த ஒபிஎஸ், இப்படி பேட்டி கொடுத்த பிறகு கொஞ்சம் ஆடித்தான் போனார் சசிகலா. உண்மையைச் சொன்னால் அவருக்கு இதன்பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜெயலலிதா நினைவிடம் போகலாம், உருக்கமாக பேசலாம், தனக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என கண்ணீர் விடலாம். பின்னர் சுற்றுப்பயணம் போகலாம் அவ்வளவுதான். இப்படியெல்லாம் கண்ணீர் மல்க பேசிவிட்டு, ஊர் ஊராக சுற்றுப்பயணம் சென்றால் மட்டும் அதிமுக-வை அவரால் கைப்பற்றிவிடமுடியுமா ? அல்லது செல்லும் இடமெல்லாம் அதிமுக மாவட்ட செயலாளர்களோ அல்லது நிர்வாகிகளோதான் வந்து அவரை சந்தித்து வணக்கம் வைக்கப்போகிறார்களா ? அது எதுவும் இப்போதைக்கோ இனியோ நடக்கப்போவதில்லை.
தேர்தலில் அதிமுகவை தோல்வியை தழுவியபோதும் கூட சலசலப்போ, எதிர்ப்போ அதிமுக தலைமைக்கு எதிராக பெரிதாக வரவில்லை என்பது சசிகலாவிற்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அதனால்தான், அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவரால் எடுக்க முடியவில்லை அல்லது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியவில்லை.
சிறையில் இருந்து வெளியில் வந்தபோதோ அல்லது தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையிலோ அதிமுக தலைமை அலுவலகமோ அல்லது போயஸ்கார்டன் பக்கமோ போயிருந்தால் கூட நிர்வாகிகள் சற்று கலங்கிப்போயிருப்பார்கள். ஆனால், அதனையும் அவரால் செய்யமுடியவில்லை. குறைந்தப்பட்சம் அதிமுக இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் கூட சசிகலாவை சந்திக்கவில்லை அல்லது சந்திக்கவே நினைக்கவில்லை. இப்படியான நிலையில்தான், ஒன்றரை கோடி தொண்டர்களிடம் (?) போனில் அழைத்து பேசும் தன் திட்டத்தை கைவிட்டார். ஒவ்வொரு டிவி-யாக பேட்டிக் கொடுக்கும் தனது வியூகத்தையும் விலக்கி வைத்துவிட்டார்.
இப்போது, வேறு என்ன செய்து அதிமுக மீட்பது என்பது அவருக்கு சுத்தமாக தெரியவில்லை. திக்குத் தெரியாமல் அலையும் மனதை அமைதிப்படுத்த தி.நகர் இல்லத்தில் தியானத்தையும் யோகாவைவும் செய்துகொண்டு, ஜெயலலிதாவோடு பழகிய காலங்களை மட்டும் அசைபோட்டபடி இருக்கும் சசிகலா, தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த அந்த ஒற்றை வழக்கை மட்டுமே மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார்..!