மேலும் அறிய
” குடும்ப மாண்பு முக்கியம்” - வைகோ பேச்சு! விஜய் குறித்த மறைமுக விமர்சனமா? விலைவாசி உயர்வு, ட்ரம்ப் பற்றி அனல் கக்கிய வைகோ!
ஹிட்லரே இன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயரில் மறு உருவம் எடுத்து அமர்ந்திருப்பதாகச் வைகோ சாடினார்.

சீறிய வைகோ
Source : whatsapp
அரசியல் தலைவருக்கு குடும்ப மாண்பு முக்கியம் – கண்ணகி, காரைக்கால் அம்மையார், வேலுநாச்சியார் போன்ற வரலாற்று சிறப்புமிக்க பெண்கள் வாழ்ந்த தமிழகத்தில் குடும்ப ஒழுக்கமும் பண்பாட்டு மதிப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் - வைகோ பேச்சு; விஜயை நோக்கிய விமர்சனமா?
மதுரை ஆர்ப்பாட்டத்தில் வைகோ
மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கடுமையான பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் இனி அடுப்பே எரியுமா என்ற கவலையில் பல குடும்பங்கள் வாழும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார். விலையேற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஹோட்டல் ஒன்றில் கிடைத்த உணவுப் பொருட்களின் விலையையும் அவர் சுட்டிக்காட்டினார். இட்லி ஒன்றின் விலை 33 ரூபாய் 33 காசுகள், மெதுவடைக்கு 33 ரூபாய் 33 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டியைத் தவிர்த்து கூடுதலாக கேஸ் கட்டணமாக 9 ரூபாய் 52 பைசா வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார். அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட இவ்வாறு கூடுதல் செலவுகள் சேர்க்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையில் ஹிட்லர்
உலகளாவிய அரசியல் மற்றும் போர் சூழ்நிலைகளும் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் கூறினார். வளைகுடா மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ள லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் பாதுகாப்பாக திரும்புவோமா என்ற அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உலகின் பல பகுதிகளில் நடைபெறும் போர் நடவடிக்கைகள் மனித உயிர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் தெரிவித்தார். ஹிட்லரே இன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயரில் மறு உருவம் எடுத்து அமர்ந்திருப்பதாகச் சாடினார். அமெரிக்காவின் ஜனநாயகப் பாரம்பரியமிக்க தலைவர்களான ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், கென்னடி மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் அமர்ந்த அதே நாற்காலியில், இன்று உலகத்தையே மிரட்டும் வகையில் ட்ரம்ப் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார். அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளான குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஒன்றிணைந்து, ட்ரம்ப் மீது தலைக்குற்றச்சாட்டைச் சுமத்தி அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார். அதேபோல் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி கொடுப்பதா? இந்தியா என்ன அமெரிக்காவின் கொத்தடிமை நாடா?என்று அவர் கேள்வி எழுப்பினார். 120 கோடி மக்களின் தன்மானத்தைப் பிரதமர் மோடி அடகு வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், 56 அங்குல மார்பு எனத் தம்பட்டம் அடிப்பது வெறும் ஜம்பம் மட்டுமே என விமர்சித்தார்.
ஒழுக்கமும் பண்பாட்டு மதிப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும்
சமூகத்தில் குடும்ப மாண்பு மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விரிவாக பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், அங்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் ஒழுக்கத்தை ஒரு தகுதியாக முன்வைப்பதை பார்த்து ஆச்சரியமடைந்ததாக குறிப்பிட்டார். குடும்ப பொறுப்பும் ஒழுக்கமும் சமூகத்திற்கும் அரசியலுக்கும் முக்கியமான அடிப்படை மதிப்புகள் என அவர் வலியுறுத்தினார். இந்தச் சூழலில், சமீப காலமாக சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தொடர்பாக வெளியான பல்வேறு விவாதங்களையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். குறிப்பாக ஒரு பொதுத் தலைவர் சமூகத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நிலையில் குடும்ப மாண்பும் ஒழுக்கமும் மிக முக்கியம் என்பதை சுட்டிக்காட்டினார். கண்ணகி, காரைக்கால் அம்மையார், வேலுநாச்சியார் போன்ற வரலாற்று சிறப்புமிக்க பெண்கள் வாழ்ந்த தமிழகத்தில் குடும்ப ஒழுக்கமும் பண்பாட்டு மதிப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட சமூகத் தீமைகளுக்கு இரையாகாமல் கல்வி மற்றும் நல்லொழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்கின்றனர் என்பதால் அந்த நம்பிக்கையை காக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















