வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு...எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வழிவகுக்குமா ராகுல் காந்தியின் திட்டம்..?
தொடர் பின்னடைவுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முக்கிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளது.
மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் வகையில் ஒரு அரசியல் நிகழ்வு சமீபத்தில் நடந்தது.
காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிராந்திய கட்சிகள்:
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. மேற்குவங்கத்தின் முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா, கடந்த சில மாதங்கள் முன்பு வரை பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தார்.
ஆனால், அவருடைய கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரின் செய்லபாட்டில் மாற்றம் தெரிய தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, பாஜகவை எதிர்ப்பது போன்றே காங்கிரஸ் கட்சியையும் சமமாக எதிர்க்க தொடங்கினார். இப்படி, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை சமீபத்தில் சந்தித்து பேசினார்.
இதை தொடர்ந்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கை மம்தா சந்தித்தார். பாஜகவை போன்றே காங்கிரஸை எதிர்க்க இந்த மூன்று முக்கிய தலைவர்களும் முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.
பின்னடைவுகளுக்கு மத்தியில் புத்துணர்ச்சி:
தொடர் பின்னடைவுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முக்கிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விதமாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், பிகார் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. வரும் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே இதன் நோக்கம்" என்றார்.
பின்னர், பேசிய ராகுல் காந்தி, "எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஒரு வரலாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு செயல்முறை. இது நாட்டிற்கான எதிர்க்கட்சிகளின் பார்வையை வளர்த்தெடுக்கும்" என்றார்.