Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று வாய்சவடால் விடுவதை தவிர்த்து, முதல்வர் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று விமர்சித்தார்.
தேமுதிக ஆர்ப்பாட்டம்:
சேலம் மாவட்டம் இடங்கண சாலையில் நெசவாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தியது. முன்னதாக சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை மிகவும் நலிவடைந்துள்ளது.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நெசவாளர்களுக்கு ஆதரவாக சேலம் அருகே இடங்கணசாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்துள்ளேன். நெசவாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ள நிலைமையில் மத்திய அரசு ஜவுளி மீது ஜிஎஸ்டி போடுவது என்பது தவறானது. நலிந்த தொழில்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்றார்.
தமிழகம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளது. கடலூர், விழுப்புரம் என பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தேன். மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொலை நோக்கு பார்வையோடு தமிழ் அரசு அணுகி இருக்க வேண்டும். திட்டமிடல் சரியாக இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி, அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் சொந்த ஊரிலேயே மக்கள் அகதியாக உள்ளனர்.
வாய்சவடால் வேண்டாம்:
முன்னறிவிப்பு இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி, மக்கள் துயரத்தில் உள்ளதால் மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று வாய்சவடால் விடுவதை தவிர்த்து, முதல்வர் அவர்கள் செயல்பாட்டில் இறங்க வேண்டும் எனவும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ஐந்தாயிரம் வழங்குகிறார்கள், ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே இங்கும் ரேஷன் கார்டுக்கு ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
மூத்த அரசியல் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மறைவுக்கு எங்கள் கட்சியின் தலைமைக் கழகம் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளோம். சென்னை சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளேன். ஈவிகேஎஸ் இளங்கோவன், எங்கள் தலைவர் விஜயகாந்த் போல மனதில் பட்டதை உறுதிப்பட வெளிப்படுத்தக் கூடியவர். அவர் எங்கள் குடும்ப நண்பர், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோட்டில் மீண்டும் இடைத்தேர்தல் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
விஜயுடன் கூட்டணி?
விஜயுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, விஜய் முதலில் எங்களை போல மக்களை சந்திக்கட்டும், செய்தியாளர்களை சந்திக்கட்டும், தன்னை நிரூபிக்கட்டும், அதன் பிறகு விஜயுடன் கூட்டணி குறித்து பார்க்கலாம் என்று கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அனைவரும் ஏற்றுக் கொண்டால் தான் தேமுதிக வரவேற்கும். இந்தியா 140 கோடி மக்களை கொண்ட ஒரு பெரிய நாடு எனவே ஒரே நாடு ஒரே தேர்தலை பல கட்சிகள் எதிர்கின்றன. இதற்கு உரிய விளக்கத்தை மத்திய அரசு தர வேண்டும். இதனை பொருத்தவரை எல்லோரும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தேமுதிக வரவேற்பு தெரிவிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.