IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA 3rd T20: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

IND Vs SA 3rd T20: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
இந்தியா - தென்னாப்ரிக்கா 3வது டி20:
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை தொடர்ந்து இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது. இதில் வென்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன. இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மாசாலா மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
கம்பேக் தருமா இந்திய அணி?
முதல் போட்டியில் 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது. சரியான மற்றும் திட்டமிடப்பட்ட பிளேயிங் லெவன் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 200-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்யும்போது அக்சர் படேலை இரண்டாவது விக்கெட்டிற்கு இறக்கியது உள்ளிட்ட பேட்டிங் ஆர்டரில் செய்யும் பல மாற்றங்கள் வீரர்களின் மனநிலையை உடைத்து அணியை ஒரு மோசமான நிலைக்கு தள்ளுவதாக முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
அணியில் மாற்றம் வருமா?
கேப்டன் சூர்யகுமார் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் கடந்த 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகின்றனர். அதேநேரம், அட்டகாசமாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன், கில்லிற்காக கட்டாயமாக ஓரங்கட்டப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு ஆகியோர் தொடக்க வீரர்களாக அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து வந்தனர். ஆனால், துணை கேப்டன் என்ற பெயரில் கில்லுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கான சரியான ப்ளேயிங் லெவனை கட்டமைக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது. எனவே, அணியின் நிலையை உணர்ந்து இன்றைய போட்டியிலாவது தேவையான மாற்றங்கள் வருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தர்மசாலா மைதானம் எப்படி?
தர்மசாலா மைதானம் பொதுவாகவே பேட்டிங்கிற்கு சாதகமானதாக கருதப்படுகிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, டார்கெட்டை சேஸ் செய்யவே விரும்புகின்றன. போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்க்த்தை ஏற்படுத்த முடியும்.
உத்தேச ப்ளேயிங் லெவன்:
இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (வி.கே.), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்ரிக்கா: குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்.), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்/ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே/கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி/கார்பின் போஸ்ச், ஆட்னீல் பார்ட்ஜே, ஆட்னீல் பார்ட்ஜே.




















