Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Thiruvananthapuram Election Result 2025: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பினராயி விஜயன் கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் அடுத்த முறை கேரளாவில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை வெளிக்காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம் யாரும் எதிர்பாராத வகையில் திருவனந்தபுரம், பாலக்காடு, திரிபுனித்துரா உள்ளிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கேரளா உள்ளாட்சி தேர்தல்
கேரள மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதி என இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 13ம் தேதியான இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவியது. மொத்தத்தில், 941 கிராம பஞ்சாயத்துகளில் 17,337 வார்டுகளிலும், 87 நகராட்சிகளில் 3,240 வார்டுகளிலும், ஆறு நகராட்சிகளில் 421 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்றது.
பினராயி விஜயனுக்கு பெரும் பின்னடைவு
இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸூம், எதிர்பாராத இடங்களிலும் பாஜகவும் வெற்றி பெற்று வருவது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டும், காங்கிரஸூம் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
இப்படியான நிலையில் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இடதுசாரி கூட்டணி தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தது. பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக இருந்து வரும் நிலையில் ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என அவர் திட்டங்களை வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அவரின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் அடுத்த முறை கேரளாவில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை வெளிக்காட்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வளர தொடங்கிய பாஜக
ஒரு காலத்தில் கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை என சொல்லப்பட்டது. கடந்த கால தேர்தல்கள் அதில் மாற்றம் கண்டு வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் நாங்கள் இடம்பிடிப்போம் என அக்கட்சி உறுதியாக நம்பிக்கை தெரிவித்து வருகின்றது. இப்படியான நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு தெம்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் பாலக்காடு, திரிபுனித்துரா உள்ளிட்ட நகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் யாரும் எதிர்பாராத வகையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் அக்கட்சி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. இது பாஜகவின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 101 இடங்களில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 50 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.





















