தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரான முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தவெக-விற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர் சிறை சென்றபோது முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இதனால், அதிமுக-வில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகளவு அறிமுகப்பட்ட முகமாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், இன்று அவரது நிலைமை என்பது பரிதாபத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது.
அரவமற்ற ஓ.பன்னீர்செல்வம்:
எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டின் கீழ் முழுவதும் உள்ள அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டு, தமிழக அரசியலில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையிலே அவர் உள்ளார். அதிமுக-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியபோது அவருக்கு பக்கபலமாக இருந்த பலரும் தற்போது வேறு வேறு கட்சிக்குச் சென்றுவிட்டனர். அவரது முக்கிய ஆதரவாளரான கடந்த மாதம் திமுக-விற்குச் சென்றுவிட்டார்.
தற்போது அவரது மிகப்பெரிய ஆதரவாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மட்டுமே ஆவார். இன்னும் 6 மாத காலமே சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தால் துளியவு தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.
டாடா சொல்லப்போகும் வைத்திலிங்கம்?
அதிமுக-வை கைப்பற்றுவேன் என்று சபதமிட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வையே மலைபோல் நம்பியிருந்த நிலையில், பாஜகவோ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை வலுப்படுத்தி சுமூகமாக தேர்தலைச் சந்திக்க காய்கள் நகர்த்தி வருகிறது.
இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்த வைத்திலிங்கம் தவெக-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஒரே நம்பிக்கையாக தற்போது இருப்பவர் வைத்திலிங்கம் மட்டுமே ஆவார்.
அவரும் ஓ.பன்னீர்செல்வத்தை விட்டு விலகி தவெக சென்றுவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய அளவில் பலவீனமாக மாறிவிடுவார். டெல்டாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாக இருப்பவர் வைத்திலிங்கம் மட்டுமே ஆவார்.
பேச்சுவார்த்தை நடத்தும் ஓ.பன்னீர்செல்வம்:
அவரும் வேறு கட்சிக்குச் சென்றுவிட்டால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் செல்வாக்கு மிக கடுமையாக சரிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால், வைத்திலிங்கத்தை தன் பக்கமே தக்க வைக்க ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
திமுக பக்கம் செல்ல முடியாத அதிமுக-வினரின் புகலிடமாக தவெக மாறி வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதற்கான தொடக்கப்புள்ளியை வைத்துள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக-வினர் தவெக-வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக- பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறுவாரா? அல்லது சுயேட்சையாக களமிறங்குவாரா? அல்லது அவர் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது வேறு கட்சியில் இணைவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாட்டின் அரசியலில் பல்வேறு கட்சித் தாவல்களும், கூட்டணி மாற்றங்களும் அடுத்தடுத்து அரங்கேறும் என்றே கருதப்படுகிறது. தினகரன், சசிகலா ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் கரம் கோர்த்தாலும் அவர்களாலும் அதிமுக-வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.





















