PM Visit to Ramanathapuram: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்திற்கு வருகிறாரா பிரதமர் மோடி?
PM Modi Visit to Ramanathapuram:அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு, பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திரப் போராட்டத் தியாகி:
முத்துராமலிங்க தேவர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில், 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார். சுதந்திரப் போராட்ட தியாகியும் ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா, ஒவ்வொரு வருடமும், அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மண்டபம் வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்.
தேவர் ஜெயந்தி:
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30-ஆம் தேதியாகும். எனவே, சுதந்திர போராட்டம் உள்ளிட்ட சேவைகளை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேவரின் ஆன்மீக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் வருகை?
இந்நிலையில், இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவும், குரு பூஜையையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அங்கு எவ்வாறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், அங்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற விவரங்கள், பின்னர் வரக்கூடிய நாட்களிலே தெரிய வரும்.
மேலும் இவ்விழாவில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்போது, பிரதமர் மோடியை, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் சந்திக்க வாய்ப்புள்ளது. பிரதமரும், அவர்களை சந்திக்க அனுமதி வழங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆனால், அவர்கள் கூட்டாக பிரதமரை சந்திப்பார்களா, இல்லை தனித்தனியாக சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also read:உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயில்.. ரூ.850 கோடி திட்டம்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி.,