முஸ்லிம்கள் குறித்து மோசமாக பேசிய மோடி.. ஒரு பிரதமர் இப்படி பேசலாமா?
முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

வக்பு சொத்துகள் சமய பயன்பாட்டுக்காக நேர்மையாக பயன்படுத்தப்பட்டிருந்தால், இஸ்லாமிய இளைஞர்கள் பைக்குக்கு பஞ்சர் போட்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது என தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
முஸ்லிம் இளைஞர்கள் குறித்து சர்ச்சை பேச்சு:
ஹரியானா மாநிலம் ஹிசாரில் நேற்று விமான நிலையத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலம் வக்பு சொத்தாக உள்ளது. ஆனால், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டன. வக்ஃப் சொத்துகள் நேர்மையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் சைக்கிள் பஞ்சர்களை சரிசெய்வதன் மூலம் வாழ்வாதாரம் ஈட்ட வேண்டிய அவசியமில்லை.
ஆனால், ஒரு சில நில மாஃபியாக்கள் மட்டுமே இந்த சொத்துக்களால் பயனடைந்தனர். தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் கைம்பெண்களுக்கு சொந்தமான நிலங்களை இந்த மாஃபியா சூறையாடி வந்துள்ளது. இந்த பிரச்னைகளுக்கு வக்பு திருத்த சட்டம் தீர்வு காணும்" எனக் கூறினார்.
இஸ்லாமியர்கள் மட்டும் பஞ்சர் போடுவதில்லை என்றும் இளைஞர்களை இந்த நிலைக்கு தள்ளியதே பிரதமர்தான் என்றும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்காரி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். ஒரு பிரதமர் இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பிய அவர், "முஸ்லிம்கள் பஞ்சர் போடுகிறார்கள் என்பது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்பவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு மொழியாகும்.
ஒரு பிரதமர் இப்படி பேசலாமா?
பிரதமர் இப்படி பேசுவது சரி அல்ல. நீங்கள்தான் நாட்டின் இளைஞர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். நாட்டில் வேலைகள் இல்லை. பஞ்சர் போடுவதுத, பஜ்ஜி விற்பது மட்டுமே ஒரே வழி. முஸ்லிம்கள் பஞ்சர் மட்டும் போடுவதில்லை. அவர்கள், வேறு என்ன வேலைகளை செய்கிறார்கள் என்பதை என்னால் பட்டியலிட முடியும்.
ஆனால், இது சரியான நேரமல்ல. (முஸ்லிம்களை) நீங்கள் காங்கிரஸ் அனுதாபிகள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்களா? இல்லையென்றால், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் உசேன், எம்.ஜே. அக்பர், ஜாபர் இஸ்லாம் (பாஜக முக்கிய தலைவர்கள்) ஆகியோரை ஏன் குப்பைத் தொட்டியில் போட்டீர்கள்? வக்பு சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்கிறீர்கள்.
ஆனால், அதை மக்களவையில் முன்வைக்க உங்களிடம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மக்களவை அல்லது மாநிலங்களவை அல்லது எந்த மாநில சட்டமன்றத்திலும் உங்களிடம் ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர் இல்லை" என்றார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஓவைசி, "சங் (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் அல்லது ஆர்எஸ்எஸ், பாஜகவின் தாய் அமைப்பு) அதன் சித்தாந்தத்தையும் வளங்களையும் நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தியிருந்தால், பிரதமர் தனது குழந்தைப் பருவத்தில் தேநீர் விற்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
मोदी ने कहा कि अगर वक़्फ़ की संपत्तियों का ठीक से इस्तेमाल होता तो मुसलमान नौजवानों को पंक्चर नहीं बनाना पड़ता। अगर संघ परिवार की सोच और संपत्ति देशहित में इस्तेमाल होती, तो मोदी को चाय नहीं बेचनी पड़ती। पिछले 11 साल में मोदी ने ग़रीब भारतीयों — हिंदू या मुसलमान — के लिए क्या…
— Asaduddin Owaisi (@asadowaisi) April 14, 2025
பிரதமர் மோடி தனது 11 ஆண்டுகால ஆட்சியில் ஏழைகளுக்கு - இந்துக்கள் அல்லது முஸ்லிம்களுக்கு - என்ன செய்தார். வக்பு சட்டங்கள் எப்போதும் பலவீனமாகவே இருந்தன. மோடியின் வக்பு திருத்தங்கள் அவற்றை மேலும் பலவீனப்படுத்தும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.





















