Presidential election: ஒரே இடம்.. தனித்தனி சந்திப்பு.. திரௌபதி சந்திப்பில் முகத்தை பார்த்துக்கொள்ளாத ஓபிஎஸ் - ஈபிஎஸ்!
திரௌபதி முர்முவை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் முர்மு:
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு, தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கோரினார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் ஓட்டலில் கூட்டணி கட்சிகளை சந்தித்தார். இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் திரௌபதி முர்முவை தனித்தனியாக சந்தித்தனர்.
இபிஎஸ் தரப்பு:
முதலில் திரௌபதி முர்முவுக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது இபிஎஸ் ஆதரவாளர்களான ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்ட பலர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
உங்கள் சகோதரியை ஆதரியுங்கள்:
அப்போது பேசிய முர்மு, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என உரையை தொடங்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டிற்கு வந்ததில் பெருமையடைகிறேன். இந்திய விடுதலைக்காக தமிழ்நாட்டிலிருந்து பல வீரர்கள் பாடுபட்டனர் . பின் கூட்டணி கட்சிகளிடம் உங்கள் சகோதரியை ஆதரியுங்கள் என முர்மு தெரிவித்தார். இதையடுத்து திரௌபதி முர்மு வெற்றி பெற துணை நிற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓபிஎஸ் தரப்பு:
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேடையிலிருந்து சென்றனர். அதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேடைக்கு வந்து திரௌபதி முர்முவை சந்தித்தனர். அப்போது முர்முவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி மலர் கொத்து கொடுத்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மேடையில் எல்.முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடன் இருந்தனர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், ஓ.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்:
அதிமுக தலைவர்கள் இருவர் தனித்தனியாக இருப்பது, அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கட்சியின் தலைவர் யார், இரட்டை தலைமை இருக்கிறதா என்ற பல்வேறு குழப்பத்தில் உள்ளனர்.
”நான் தான் ஒருங்கிணைப்பாளர்”
ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், முர்முவுக்கு ஆதரவை தெரிவித்தோம். கழக விதிகளின் படி, இன்று வரை நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன் என தெரிவித்தார்.