தலையில் சுமந்து செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்
சுதந்திரம் பெற்றது முதல் சாலை வசதியே இல்லாத கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு, வாக்கு இயந்திரங்களை அதிகாரிகள் தலையில் சுமந்து சென்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்காகவும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் போதமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் கீழூர், மேலூர், கெடமலை என மூன்று குக்கிராமங்கள் உள்ளன.
கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலை கிராமத்தில் 453 ஆண் வாக்காளர்கள், 449 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 902 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கீழூர் மற்றும் கெடமலை ஆகிய இரு கிராமங்களிலும் தனித்தனியாக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரு வாக்குப்பதிவு மையங்களுக்கும் இன்று காலையில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், மை, எழுது பொருட்கள் உள்ளிட்ட தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மலை அடிவாரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.
இந்த பொருட்களை எல்லாம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தலையில் சுமந்தபடி கொண்டு சென்றனர். சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை பாதையே அமைத்துக்கொடுக்கப்படாத இந்த கிராமத்திற்கு, 7 கிலோ மீட்டர் தூரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டுமெ் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாக்குப்பதிவு மையத்திற்கு சுகாதாரப் பணியாளர்கள், வனத்துறையினர், காவலர்கள் என மொத்தம் 12 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்ற அந்த கிராம மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் இதுவரை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.