"அவரு ரொம்ப பாவம்" போதைப்பொருள் வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சீமான் கருத்து
போதைப்பொருள் வாங்கி கைதான நடிகர் ஸ்ரீகாந்த் ரொம்ப பாவம் ஆனவர் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
யாருமே பேசாத மொழிக்கு எதுக்கு நிதி?
சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கியது குறித்து பேசிய சீமான், "யாருமே பேசாத மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். யாரால் அதிக வருவாய் வந்து கொண்டிருக்கிறது. நம்மை என்ன செய்தாலும் மானம் கெட்டுப் போய் அவர்களுக்கே திருப்பி திருப்பி வாக்களிப்பதால் அவர்கள் நம்மை போட்டு மிதிக்கிறார்கள்.
சமஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் பேசப்படவில்லை. கோயிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள். அதற்காக இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டிய அவசியம் என்ன" என்றார்.
முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது தொடர்பான கேள்விக்கு, "அவர்கள் முருகனைத் தொட்டதே அரசியல் தான். இவ்வளவு காலம் செய்யாமல் தேர்தல் வருவதால் மாநாடு நடத்துகிறார்கள். இதே போல ஆண்டுதோறும் நடத்துவார்களா? அடுத்தாண்டு முருக பக்தர்கள் மாநாடு போடட்டும். அது அரசியலா? இல்லையா? என்பதை பார்ப்போம்" என்றார்.
"அவரு ரொம்ப பாவம்"
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் குறித்து பேசிய அவர், "இப்போதுதான் கும்பாபிஷேகம் குடமுழுக்காக மாறி உள்ளது. ஒவ்வொன்றாக வரும். தமிழர்களின் உரிமைகளை போராடி பெற வேண்டிய நிலை உள்ளது.
ஒவ்வொரு கோயில்களிலும் போராடி போராடி தான் பெற்று வருகிறோம்" என்றார்.
போதைப்பொருள் வாங்கி நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், "எனக்கு தனிப்பட்ட முறையில் ஸ்ரீகாந்தை தெரியும். அவர் பாவம் என்பதே என்னுடைய கருத்து. புகழ்பெற்ற நிறைய பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதுபோன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒழிக்க வேண்டும் என அரசு நினைக்க வேண்டும்.ஸ்ரீகாந்த் கைதாகவில்லை என்றால் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்" என்றார்.
என்ன பேசினார் சீமான்?
2026 தேர்தலில் போட்டியிட உள்ள தொகுதி குறித்து பேசிய சீமான், "எல்லா வேட்பாளரையும் அறிவித்த பின்பு ஒரு தொகுதி காலியாக இருக்கும். அதில், நான் நிற்பேன். பொறுங்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆடு மாடுகளின் உரிமைக்காக போராட்டம் நடத்துவேன் என சொன்னேன். மாடே இல்லாமல் மாட்டுப்பால் எங்கிருந்து விக்கிறீங்க. ஆடு, மாடு வளர்ப்பது எங்களுடைய விவசாயத்தின் எங்களுடைய நீட்சி. எங்க வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. ஜூலை 10 ஆம் தேதி, மதுரையில் வீராதனூரில் மாநாடு நடத்த உள்ளேன்" என்றார்.





















