கரூரில் கர்நாடக முதல்வர் உருவ பொம்மை எரிப்பு; நாம் தமிழர் கட்சியினர் 47 பேர் கைது
கரூர் நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென்று காரில் மறைத்து வைத்திருந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எடுத்துக் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில், காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, நாம் தமிழர் கட்சியினர் திடீரென்று காரில் மறைத்து வைத்திருந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எடுத்துக் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனால், அதையும் மீறி சித்தராமையா உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கரூரில் காவல்துறை அனுமதியை மீறி கர்நாடக முதல்வர் சித்ராமைய்யா உருவ பொம்மையை எரித்ததால் நாம் தமிழர் கட்சியினர் 47 பேர் கைது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர், கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரை மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அனுமதியை மீறி உருவ பொம்மையை எரித்த சம்பவத்திற்காக 4 பெண்கள் உட்பட 47 நாம் தமிழர் கட்சியினரை கரூர் நகர காவல் துறையினர் கைது செய்து காவல்துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.