Vijayakanth Health: விஜயகாந்த் நலம்; கொரோனா இல்லை - மருத்துவமனை தகவல்
தற்போது விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் - தேமுதிக அறிக்கை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று, அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியானது. எனினும், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்கு பின் முழு விபரம் தெரிய வரும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு விஜயகாந்த் தெரிவித்தார். மேலும், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு கொரோனா தொற்று: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயகாந்த் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குள் குணமடைந்து வீடு திரும்பினார். விஜயகாந்த் லேசான அறிகுரியற்ற நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்தாண்டு ஏற்பட்ட முதல் அலையின் போது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரவித்ததை அடுத்து, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாகவே, மோசமான உடல்நிலையால் விஜயகாந்த் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். உடல்நிலையை கருத்தில் கொண்டு நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மேலும், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். கூட்டத்தில் எதுவும் பேசாமல், முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.