பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை என்ற ஒரே காரணத்தால் தமிழகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்குகின்றனர் - முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர்
ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம் என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருக்கருகாவூர் மற்றும் கடவாசல் ஆகிய கிராமங்களில் முன்னாள் மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்திகளை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறுகையில், "மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது நல்ல விஷயம்.
வரும் 19 -ஆம் தேதி அன்று இந்தியா கூட்டணி கட்சியினர் கூடப் போகிறார்கள். அந்த நேரத்தில் எப்படி 2024 -ல் நடக்க இருக்கிற தேர்தலை சந்திப்பது என தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளனர். 2024 -இல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படி இருந்தாலும் நாம் கடுமையாக போராட வேண்டும். நாட்டை காப்பாற்ற வேண்டியது தான் அவசியம். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தல் நிற்பது எனது கையில் இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் மயிலாடுதுறை தொகுதியில் 2 லட்சத்திற்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளனர். ஆகவே அதிகமாக அவர்கள் தான் மீண்டும் இந்த தொகுதியை காப்பாற்றி வைத்துள்ளனர். கூட்டணி அடிப்படை யாருக்கு எந்த இடம் என தெரிந்த பிறகு தான் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
சென்னை வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள நிதி மிகவும் குறைவாக உள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாடு பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை. அந்த ஒரே காரணத்தினால் தமிழகத்தில் குறைந்த நிதி ஒதுக்குகின்றனர். இப்படியா அரசியல் நடத்துவது? இப்படியா நமது நாட்டின் ஒற்றுமையை காப்பாற்றுவது? இப்படி எல்லாம் செய்து நம்ம நாடு சிதறிப் போய்விட்டது. இதனை புரிந்து கொள்ளும் அளவுக்கு பாஜகவுக்கு புத்தி இருக்கிறதா என தெரியவில்லை. அமலாக்கத்துறை நிறைய இடங்களில் அட்டகாசம் செய்து வருகிறது. ஜனநாயகத்துக்கு அது பெரிய ஆபத்து. ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம். இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.
2014 -ல் பாராளுமன்ற தேர்தலில் 69 சதவீதம் மக்கள் பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை. 2019 தேர்தலில் 37 சதவீத ஓட்டுகள் தான் பாஜகவிற்கு விழுந்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு 63 சதவீதம் வாக்கு விழுந்தது. அந்த அடிப்படையில் நாம் கூடி எந்த வாக்குகள் பாஜகவுக்கு போகாமல் இருக்கோ அதனை ஒற்றுமையாக ஒரே இடத்தில் கொடுத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு வித்திட வேண்டும். வரும் தேர்தலில் பாஜக ஆட்சியை கவிழ்த்து இந்தியா கூட்டணி ஆட்சி வரலாம். பாஜக அட்டகாசம் குறைய வாய்ப்பு கிடைக்கும். தப்பித்தவறி பாஜக மீண்டும் இடம் கிடைத்தால் நாட்டுக்கு பெரிய ஆபத்து. நமது நாட்டின் ஒற்றுமையும் ஜனநாயகம் காப்பாற்ற முடியும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்றார்.