EXCLUSIVE: ‛அதிமுக வேட்பாளராக என் மகன் தற்கொலை செய்தான்...நான் சுயே.,ஆக நிற்கிறேன்’ -காஞ்சிபுரம் வேட்பாளர் கவலை!
‛‛மாவட்ட செயலாளரிடம் கட்சி அங்கீகார கடிதம் கேட்டேன். ‛செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முடியட்டும்,’ என்று கூறினார். அந்த கூட்டத்திற்குப் பின் கட்சியே பிளவுபட்டுவிட்டது’’
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக, அக்கட்சியின் இரட்டைத் தலைமையாக இருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவியே இனி இல்லை என்கிற எடப்பாடி தரப்பு, ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் ஓபிஎஸ். இருவரும் சட்டத்தின் கதவை தட்டியுள்ளனர். யார் கையில் கட்சி என்பதை அறிய, இன்னும் சில காலம் ஆகலாம் என்பது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பணியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தமுள்ள 500க்கும் மேற்பட்ட பதவிகளில், 34 பதவிகள் கட்சி சார்ந்தவையாகும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில், அந்த பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிடலாம். அதற்கான வேட்புமனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை முடிந்து, வாபஸ் பெற கடைசி நாளாகும். இன்றே இறுதிவேட்பாளர் விபரம் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் அங்கீகார கடிதம் வழங்க முடியாத சூழல் உள்ளது. அதற்கான படிவத்தில் யார் கையழுத்திடுவது என்கிற பிரச்சனை காரணமாக, அதிமுக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள், கட்சி படிவத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக களம் காண வேண்டியுள்ளது. சிலர், அதை விரும்பாமல் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இன்னும் சிலர், கட்சி கடிதம் கிடைக்கும் என கடைசி நொடி காத்திருக்கின்றனர். பலர், சுயேட்சையாக போட்டியிடுவோம் என புறப்பட்டுவிட்டனர். தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், வேட்பாளர்கள் போட்டியிடாமல் போனது, இதுவே முதல் முறை. இதுஒருபுறமிக்க, காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, திமுகவினரின் ‛டார்ச்சர்’ காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட, ஜானகிராமனின் தந்தை வேணுகோபால், இம்முறை மகனுக்கு பதில் போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளர் என்கிற ஒரே காரணத்திற்கான தன் மகனை இழந்த வேணுகோபாலுக்கு, அந்த இறப்பிற்காக நடைபெறும் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏபிபி நாடு சார்பில், வேணுகோபாலை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் அளித்த பதில்கள் இதோ...
‛‛அதிமுக வேட்பாளராக தான் என் மகன் தற்கொலை செய்து கொண்டான். அவனுக்கு பதிலாக தான், நான் இப்போது போட்டியிடுகிறேன். என் மகன் போட்டியிட்ட சின்னம், இப்போது எனக்கு கிடைக்கவில்லை. எம்.பி., தேர்தல், எல்.எல்.ஏ., தேர்தல் வரும் போதெல்லாம், அதிமுகவிற்கு இரட்டை இலையில் வாக்கு கேட்டு செல்வேன். இன்று நான் போட்டியிடுகிறேன்; என்னால் நான் சார்ந்த கட்சியின் சின்னத்தை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. வேட்புமனுத்தாக்கலின் போதே, மாவட்ட செயலாளரிடம் கட்சி அங்கீகார கடிதம் கேட்டேன். ‛செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முடியட்டும்,’ என்று கூறினார். அந்த கூட்டத்திற்குப் பின் கட்சியே பிளவுபட்டுவிட்டது. இனி அடுத்த பொதுக்குழு ஜூலையில் தான் நடைபெற உள்ளது. எனவே கட்சி அங்கீகார கடிதம் வாங்குவதற்கு சாத்தியம் இல்லை என்று மாவட்ட செயலாளர் கூறிவிட்டார். சுயேட்சையாக போட்டியிடுமாறு மாவட்ட செயலாளர் கூறியதால், நானும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டேன்; ஆனால், கட்சி வேட்பாளராக களம் காணவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. கட்சியின் பிளவு, என் வெற்றியை பாதிக்காது என்கிற நம்பிக்கையில் களத்தில் உள்ளேன். உலக உருண்டை, வைரக்கல், பெண்கள் பணப்பை ஆகிய சின்னங்களை கேட்டுள்ளேன். இந்த மூன்றில் எந்த சின்னம் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்வேன்,’’ என்று கூறினார்.