திருச்சுழியில் தேர்தலை ரத்துசெய்ய முடியாது. தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..
திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்துசெய்ய முடியாது, தேர்தல் ஆணையமே அதை முடிவு செய்யும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக, அந்த தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இதன் காரணமாக திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்துசெய்வது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவுசெய்ய வேண்டும். எனவே திருச்சுழி தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கமுடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.