AIADMK Party Update : தனித்தனி அறிக்கை… ஒற்றை தலைமையை நோக்கி மீண்டும் நகர்கிறதா அதிமுக…?

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரான ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஈபிஎஸ் ஆகிய இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை கொடுத்து வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை போட்டி அதிமுகவை மீண்டும் ஒற்றைத் தலைமையை நோக்கி அழைத்துச் செல்கிறதா...?

அதிமுகவை கட்டிக் காக்க இரட்டை குழல் துப்பாக்கியாய் இணைந்து செயல்படுவோம் என அதிரடி அறிக்கை வெளியிட்டு, செயல்பட தொடங்கிய ஒபிஎஸ்-சும், ஈபிஎஸ்-சும் இப்போது தனித்தனி அறிக்கை வெளியிட்டு தன்னை முன்னிலைப்படுத்தி வருவது ரத்தத்தின் ரத்தங்களிடையே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.AIADMK Party Update : தனித்தனி அறிக்கை… ஒற்றை தலைமையை நோக்கி மீண்டும் நகர்கிறதா அதிமுக…?


அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தபோதே, இருவர் வீட்டுக்கும் அமைச்சர்கள் இரவு பகலாய் கார்களில் பறந்து, சமாதான படலத்தை ஏற்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒபிஎஸ்-ஐ வைத்தே அறிவிக்க வைத்தார்கள். அதன்பிறகு தேர்தல் நடந்து முடிவுகள் வெளியான மே 2ஆம் தேதி முதல் தொடங்கியது அவர்களுக்குள்ளான அடுத்த “போர்”. மே 2 அன்றே அதிமுக தோல்வி குறித்து இருவரும் சேர்ந்து தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அதில், கடமையை உணர்ந்து தோளோடு தோள் சேர்ந்து தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


அடுத்த இரண்டு நாட்களில் அதாவது மே 4ஆம் தேதி சென்னை ஜெ.ஜெ. நகரில் அம்மா உணவக பலகையை திமுகவினர் அகற்றியபோது கொதித்தெழுத்த ஒபிஎஸ், தன்னந்தனியனாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனது முதல் அறிக்கையை தட்டிவிட்டார். பின்பு இந்த விவகாரத்தில் இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றையும் விட்டனர்.  சரி, அம்மா உணவகம் தாக்கப்பட்டதற்கு விடுத்த ஒற்றை தனி அறிக்கையோடு ஓய்ந்தாரா ஒபிஎஸ் இல்லையே, அடுத்து, 5ஆம் தேதி ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டுமென முதல்வருக்கு இன்னொரு அறிக்கையை அனுப்பினார். அப்போதும் எடப்பாடி பழனிசாமி அமைதியாகவே இருந்தார். ஏனென்றால், 7ஆம் தேதி யார் எதிர்க்கட்சித் தலைவர் என முடிவு செய்ய வேண்டியிருந்தது.


6ஆம் தேதி இருவரும் சேர்ந்து இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கை விட்டனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகான இவர்களது 2வது கூட்டறிக்கை இது. அடுத்து 7ஆம் தேதி வந்தது, எதிர்க்கட்சித் தலைவர் ஒபிஎஸ்-சா, ஈபிஎஸ்சா என முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அடுத்த நாளே அதாவது மே 8ஆம் தேதியே கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதை அரசு உறுதி செய்யவேண்டுமென அசால்டாக அடுத்த அறிக்கையை அடுக்கினார் ஒபிஎஸ். அதற்கடுத்து, 10ஆம் தேதியும் வந்தது, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். கூட்டத்தில் இருந்து முதல் ஆளாய் வெளியேறினார் ஒபிஎஸ். மூன்று நாட்கள் அமைதியாக இருந்த அவர் மே 14ஆம் தேதி ரம்ஜான் வாழ்த்து செய்தியையும் தனது பெயரிலேயே தனி அறிக்கையாக வெளியிட்டார்.


இத்தனை நாட்களாக அமைதியாக ஒபிஎஸ் அறிக்கைகளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சி தலைவராக தேர்வாகி தனது கைக்கு அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட் வந்ததும், முதல்வருக்கு அல்ல நேரடியாக பிரதமருக்கே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மே 15ஆம் தேதி தனது முதல் கடிதத்தை தட்டினார். தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவீர், தடுப்பூசி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கவேண்டும் என்ற கடிதம்தான் அது. தலைமைச்செயலக முகவரி, முன்னாள் முதல்வர் என்ற வரிகளை தாங்கிக்கொண்டு டெல்லி பறந்தது அந்த கடிதம்.


AIADMK Party Update : தனித்தனி அறிக்கை… ஒற்றை தலைமையை நோக்கி மீண்டும் நகர்கிறதா அதிமுக…?


மே 16ல் இருவரும் எந்த அறிக்கையும் கொடுக்காததால் அந்தநாள் அதிமுகவினர் இடையே அமைதியாகவே கழிந்தது. அடுத்து மே 17 அன்று கொரோனா நிவாரண பணிகளுக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும், மே 18ஆம் தேதி நிதி தலைமைச் செயலாளரிடம் வழங்கப்பட்டு விட்டது எனவும் இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை கொடுத்தனர். இனி இருவரும் சேர்ந்துதான் அறிக்கை விடுவார்கள், பழையபடி மனங்களாலும் இணைந்துவிட்டனர் என கழக கண்மணிகள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அதற்கு அடுத்த நாளான அதாவது மே 19ஆம் தேதி, பதிவு செய்த, செய்யாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கவேண்டுமென எடப்பாடி பழனிசாமியும், தனியார் ஆம்புலனஸ் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என ஒ.பன்னீர்செல்வமும் ஒரே நாளில் தனித் தனியாக அறிக்கை விடுத்தனர்.  அதிர்ந்துதான்போயினர் ரத்தத்தின் ரத்தங்கள். கட்சிகளுக்கிடையே அல்லது  மாற்றுக் கட்சி தலைவர்களிடையே நடந்த அறிக்கைப்போட்டியை மட்டுமே இதுநாள் வரை பார்த்துவந்த அவர்கள்,  இப்போது அதிமுக என்ற கட்சிக்குள்ளேயே அறிக்கை போட்டி ஒரு போர் போல நடந்துவருவதை கண்டு, தங்களது கண்ணில் விழுந்த தூசியை யாருக்கும் தெரியாதபடி  கரைவேட்டியால் துடைத்துக்கொண்டனர்.


இப்படி இருவரது வெவ்வேறு அறிக்கைகள் ஒரே நாளில் வெளிவர, அதற்கு அடுத்த மே 20ஆம் தேதி அரபிக்கடலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என பிரதமருக்கு இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடிதம் எழுதி தனது அதிகாரத்தை காட்டினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதேநாளில் கரும்பூஞ்சை தாக்குதலை முளையிலேயே கிள்ளியெறிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்தி அடுத்த அறிக்கையை கொடுத்தார் ஒபிஸ். மே 21ஆம் தேதி கடலூர் மாவட்ட திட்டக்குடியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என எடப்பாடி அடுத்த அறிக்கை எழுத, அதே நாளில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலை கட்சியில் இருந்து நீக்கி இருவரும் கூட்டாக உத்தரவு பிறப்பித்தனர். 


போதுமான தடுப்பூசிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், கூடுதல் தடுப்பூசிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுப்பெற வேண்டும் என்று தனது 22ஆம் தேதி அறிக்கையில் அனல் கிளப்பினார் ஓபிஎஸ்.  இப்படியாக இந்த நாட்கள் நகர்ந்துக்கொண்டிருக்க, அடுத்து வந்தது 23ஆம் தேதி, ’எங்களது பெயர்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிறுத்தும் செயல்களை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை, மாறாக வேதனைப்படுகிறோம்’ என்று எமோஷனலாக இருவரும் சேர்ந்து ஓர் அறிக்கை கொடுத்ததோடு, தங்கள் ஆசைக்கும் தேவைக்கும் கழகத்தை பயன்படுத்துவோர் கட்சியை விட்டே நீக்கப்படுவர் என எச்சரித்தனர். அதோடு நிறுத்தாமல் ’அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்’ என்ற குறலை மேற்கோள்காட்டி, அதற்கான விளக்கத்தை சொல்லாமலேயே இதன்படி தொண்டர்கள் நடக்கவேண்டும் என கூறி தங்களது அறிக்கையை முடித்திருந்தனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் குறலுக்கான விளக்கத்தையே அரசு பேருந்துகள் முதல் ஆலமரத்தடி வரை எழுதிப்போடும்போது, வலியறிதல் என்ற அதிகாரத்தில் ஒரு குறளை எடுத்து அறிக்கையில் சேர்த்து வெளியிடும்போது ஏன் அதற்கான விளக்கத்தை தலைமை கொடுக்கவில்லை என கடைகோடி தொண்டனும் யோசிக்கத் தொடங்கினான்.


இப்படி தொண்டர்களை ஒழுங்குப்படுத்த அறிக்கைவிட்ட இருவரும், இனி இதேபோல் இணைந்தே அறிக்கைவிடுவார்கள் என அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த அடுத்த நாளே அதனை தவிடுபொடியாக்கும் வகையில், மே 24ஆம் தேதி அரசு பணிகளில் அரசியல் கட்சியினர் தலையிடுவதை முதல்வர் தடுக்க வேண்டுமென தனியாக அறிக்கை விட்டார் ஒபிஎஸ், 25, 26, ஏன் இன்றைய தினமான 27ஆம் தேதி வரை கூட அவர் அஸ்திரங்கள் போல தொடர்ந்து வெவ்வேறு பிரச்னைகள் குறித்து தனியாக அறிக்கை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.


’இருவருக்குள்ளுமான இந்த போட்டியில் இதுவரை அதிமுக சார்பில் விடுக்கப்பட்டிருந்த 20 அறிக்கைகளில் தனியாக 11 அறிக்கைகளைவிட்டு ஒபிஎஸ் முதலிடத்திலும், 6 அறிக்கைகளை விட்டு ஈபிஎஸ் இரண்டாவது இடத்திலும், வெறும் 4 அறிக்கைகளை மட்டுமே கூட்டாக விட்டு அதிமுக மூன்றாவது இடத்திலும் இருக்கிறது’. ஏற்கனவே தேர்தலில் தோல்வியடைந்துள்ளதால், இந்த தனித்தனியான அறிக்கைகள் நிச்சயம் தொண்டர்களை சோர்வடையவைக்கும் என்று கணிக்கும் அரசியல் பார்வையாளர்கள், அதிமுகவில் அதிகாரமிக்கவர் யார் என்ற போட்டி இதனை பார்க்கும்போது உச்சநிலையில் இருப்பது பட்டவர்த்தனமாக தெரிவதாகவும் குறிப்பிடுகிறார்கள். இதன்பிறகு, இந்த அதிகார போட்டி இன்னும் கூர்மையடைந்து மீண்டும் ஒற்றைத் தலைமையை நோக்கி அதிமுகவை அழைத்துச் செல்லும் என்பதுதான் பத்திரிகையாளர்களின் கணக்காக இருக்கிறது.

Tags: aiadmk Edappadi Palanisamy eps OPS O paneerselvam OPSVsEPS

தொடர்புடைய செய்திகள்

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு