எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு ட்வீட் - 'நான் எதுவுமே சொல்லல' என விளக்கமளித்த பாண்டியராஜன்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்சஒழிப்புத்துறை சோதனை பற்றி தான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த சட்டபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தி.மு.க. அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொணடு வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார். அவர்களின் சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களையும், முக்கிய கோப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த நிலையில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கோவை, குனியமுத்தூரில் உள்ள சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை பல மணிநேரம் நடத்தப்பட்டது. மேலும், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மூன்று பைகள் நிறைய ஆவணங்களும், முக்கிய கோப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.
இந்த நிலையில், வேலூர் சரவணன் என்ற தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி தனது டுவிட்டர் பக்கத்தில், வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாக பதிவிட்டிருந்தார்.
வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும்.
— வேலூர் சரவணன்🖤❤️ (@SaraVellore) August 10, 2021
என்னை ஒன்றும் செய்ய முடியாது.
-முன்னாள் அமைச்சர் @mafoikprajan#ஊழல்மணி_வேலுமணி
அவரது பதிவிட்டிற்கு பதிலளித்துள்ள முன்னாள் தமிழ்த்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் வேலூர் சரவணனின் பதிவிற்கு கீழ், தயவு செய்து இந்த போலியான செய்தியை நிறுத்துங்கள். நான் இதுபோன்று சொல்லவே இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
Pl stop this fake news. I never said this.
— Pandiarajan K (@mafoikprajan) August 10, 2021
முன்னதாக, தமிழ்த்துறை அமைச்சராக பதவிவகித்த மாபா பாண்டியராஜன் நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவர் பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் தோல்வியை தழுவினார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தான் இனி தன்னுடைய தொழிலில் 100 சதவீத கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதனால் அரசியல்வாதியாக ஊடகத்தின்முன்பு வரமாட்டேன் என்றும் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில். அ.தி.மு.க.வின் உறுப்பினராக கட்சியில் தொடர்வேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாபா பாண்டியராஜன் பா.ஜ.க.வில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி தே.மு.தி.க.வில் சட்டசபை உறுப்பினராக பதவிவகித்து, பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.