குலை நடுங்கிய செங்கோட்டையன்.... சொந்த மண்ணில் சூறாவளியை காட்டிய இபிஎஸ்- அடுத்த என்ன.?
செங்கோட்டையன், தவெகவில் இணைந்த நிலையில், அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி கெத்து காட்டி கொங்கு மண்டலம் தனது கோட்டையென நிரூபித்துள்ளதாக அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு தயாராகும் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. எதிர்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தி வருகிறது. ஆனால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் எதிர்கட்சியை எதிர்க்க முடியாமல், சொந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் திணறி வருகிறது. அதிலும் அதிமுக மூத்த தலைவராகளாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தனி அணியாக இபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மூத்த நிர்வாகிகளான அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து திமுகவிற்கு பல்டி அடித்தனர்.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
இதனை ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி சமாளித்து வந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அதிமுகவில் 50 ஆண்டுகால மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், பிரிந்து சென்ற நிர்வாகிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். அடுத்தாக ஓபிஎஸ், டிடிவி, சசிகலா என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார். இதனையடுத்து தனது பலத்தை காட்டும் வகையில் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைத்த செங்கோட்டையன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தாக தவெகவில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், கொங்கு மாவட்டத்தின் அமைப்பு செயலாளர் பதவியையும் பெற்றார்.
செங்கோட்டையனை நீக்கியது ஏன்.?
செங்கோட்டையன் அதிரடி அரசியலால் அதிமுக செல்வாக்கு ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்த நிலையில், கொங்கு மண்டலம் எப்போதும் எனது கோட்டை அதனை யாராலும் அதனை பறிக்க முடியாது என நிரூபிக்கும் வகையில் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையம் களத்தில் இறங்கி அசத்தியுள்ளார் இபிஎஸ், அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், மனம் திறந்த பேசுவதாக கூறி தலைமைக்கே காலக்கெடு வைத்துள்ளார் செங்கோட்டையன், தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இதனால் பதவியை பறித்தோம், அதற்கு பிறகும் திருந்து வார் என எதிர்பார்த்தோம் அவர் திருந்தவில்லை. பசும்பொன் விழாவின் போது, கட்சியில் நீக்கப்பட்டவர்களோடு தொடர்பு வைத்ததால் அவர் லாயக்கற்றவர் அதனால் தான் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினோம்.வரும் 2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கோபியில் வெற்றி விழா கொண்டாடுவோம் என எடப்பாடி உறுதிபட கூறினார்.
அதிமுகவினருக்கு ஆசை வார்த்தை
செங்கோட்டையன் கோட்டையில் அதிமுகவிற்கு கூட்டம் கூடாது, இனி அதிமுக அவ்வளவு தான் என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் இபிஎஸ் கூட்டத்திற்கு யாரும் செல்ல கூடாது, கிடா வெட்டி கறி விருந்து வைக்கிறேன் என பல ஆசை வார்த்தைகளையும் கோபியில் உள்ள அதிமுகவினருக்கு செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர்.
ஈரோடு அதிமுக கோட்டை
ஆனால் எங்கள் சப்போர்ட் எப்போதும் அதிமுகவிற்கு என கூறும் வகையில் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி அதிமுக தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் செங்கோட்டையன் உடன் தவெகவில் இணைந்த 12 நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பணியை இபிஎஸ் கையில் எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






















