Modi - EPS: நேற்று பா.ஜ.க.விற்கு கல்தா.. இன்று பிரதமர் மோடிக்கு தூது.. ஒரே இரவில் எடப்பாடி பல்டியா..?
அதிமுக - பாஜக கூட்டணி இடையே ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி இடையே ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய பேனர்:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கான பணிமனையில் அமைக்கப்பட்டு இருந்த பேனரில் பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறாததது, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதோடு அந்த பேனரில், பாஜக கூட்டணியின் பெயரான தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயர் இடம்பெற்றிருந்தது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து விட்டதோ என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த நடவடிக்கைக்கு தக்க நேரத்தில் பதில் கொடுக்கப்படும் என கூறினார். அதோடு, நேற்று டெல்லி சென்ற அவர், பாஜகவின் முக்கிய தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மாற்றப்பட்ட பேனர்கள்
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக பணிமனையில் இரண்டு முறை பேனர் மாற்றப்பட்டுள்ளது. முதலில் வைக்கப்பட்ட பேனரில் கூட்டணி கட்சிகளின் பெயர்கள் எதுவும் இன்றி, அதிமுக தலைவர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அந்த பேனரையும் அகற்றி விட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி என குறிப்பிடப்பட்ட பேனர் பணிமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேனரில் பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. இதனால், பாஜகவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பு புறக்கணிக்கிறது என்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது.
வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்:
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை அறிவித்தார். பாஜகவிடம் தேர்தலுக்காக ஆதரவு கோரியுள்ளோம். ஒருவேளை அவர்கள் வேட்பாளரை அறிவித்தால் தங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வோம் எனவும், பாஜகவின் நிலைப்பாட்டிற்காக காத்திருப்போம் எனவும், ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனால், பா.ஜ.க. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஆதரவு அளிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்:
ஓபிஎஸ்-பாஜக-இபிஎஸ் இடையேயான கூட்டணி கணக்குகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த அதிமுக - பாஜக கூட்டணி இடையேயான சலசலப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தசூழலில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக விளக்கமளித்தார்.
ஆனாலும், ஈரோட்டில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையிலும் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையிலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தம்பிதுரையை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.