திமுகவில் மூத்த அமைச்சர்களுக்கும் இளைஞர்களுக்கும் பிரச்சனையா? - சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில்!
புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்வது தவறு. அது மக்களின் வரிப்பணம்,தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக "சட்டமன்ற நாயகர் கலைஞர் " என்ற தலைப்பில் நடைபெறும் மாநில அளவிலான கருத்தரங்கு மற்றும் பேச்சுப் போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து உரையாற்றினார். இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ;
தமிழக அரசின் முதல் பணியே கல்வி தான். இந்தியாவில் கல்வியில் வளர்ந்த மாநிலமாக நமது மாநிலம் திகழ்கிறது. கல்வி கட்டமைப்பிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சமிக்ரா அபியான் திட்டத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்குவோம் என்று சொல்வது தவறு.நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் ,அது மக்களின் வரிப் பணம்.
5 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையவில்லை என்றால் குலக் கல்விக்கு செல்ல வேண்டும் ,சமஸ்கிருதம் படிக்க வேண்டும்,தன்னாட்சி அங்கீகாரம் ரத்து உள்ளிட்டவற்றை புதிய கல்வி கொள்கையில் இருப்பதால் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது.
20 சதவீதம் வரி மத்திய அரசுக்கு போதும்,மாநிலங்களுக்கு 80 சதவீதம் ஜி எஸ் டி வரி கொடுக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் கல்வி தமிழகத்தில் வழங்கப்படுகிறது. அதை கெடுக்கும் விதமாக புதிய கல்விக் கொள்கை உள்ளது
வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் 19 சதவீதம் கட்டப்படுகிறது. அதே நேரம் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.100 மடங்கு சொத்து வைத்துள்ளவர்களுக்கு இந்த தள்ளுபடி தேவையா ?
பணக்காரர்களுக்கு கடனை தள்ளுபடி செய்யும் அரசு ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுப்பதில்லை...11 ஆயிரம் கோடி கல்வி கடனை மத்திய அரசு ஏன் தள்ளுபடி செய்வதில்லை
14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ள விவரங்களை ஓர் நாள் நீதி மன்றம் கேட்கும். யார் யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்துள்ளார்கள் என்பதை விசாரிக்கும். நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் எழுத வேண்டும் என கூறினார்.
கடந்த சில நாட்களாக திமுகவில் மூத்த அமைச்சர்களுக்கும் , இளைஞர்களுக்கும் பிரச்சனை இருப்பதாக எதிர் கட்சிகள் சொல்வது குறித்த கேள்விக்கு , ஏதாவது விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என கூறினார்.
புதிய கல்வி கொள்கை தமிழ் சமுதாயத்தை , தமிழ் கல்வியை குழி தோண்டி புதைத்து விடும். புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது