திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்; பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
மின்சார வாரியம் தனியார் மையமாக்கப்பட்டால் மின்சார வாரியத்தில் பணியாற்றில் வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகள் பறிபோகும்.

விழுப்புரம் : பீகாரில் பல தில்லுமுல்லுகளை செய்து பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மத்திய அமைப்பின் மாநில செயலாளராக பணியாற்றிய அம்பிகாபதி அவர்களின் பட திறப்பு விழாவில் கலந்து கொண்டக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அம்பிகாபதி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மின்சார வாரியம் தனியார் மையமாக்கப்பட்டால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகள் பறிபோகும்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன்.,
நாடு முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கிற அளவுக்கு ஏற்கனவே பல சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றிள்ளது. அதனை மேலும் தீவிரப்படுத்தி, அமலாக்கும் சட்ட திருத்தத்தை வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்மொழியவுள்ளனர். அதேபோல மின்சார திருத்த சட்டம் 2025-ஐ நிறைவேற்ற இந்த நாடாளுமன்றத்தில் முன்மொழியவுள்ளனர். இதனால் மின்விநியோகம் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். அரசு பணி என்பதை இல்லாத நிலை என்பது ஏற்படும். மின்சார வாரியம் தனியார் மையமாக்கப்பட்டால் மின்சார வாரியத்தில் பணியாற்றில் வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகள் பறிபோகும். இந்த சட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியா முழுமைக்கும் உள்ள தொழிலாளர் அமைப்புகளும் கடுமையான போராட்டங்களை நடத்தவுள்ளோம்.
உச்ச நீதிமன்றம் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான ஆய்வு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது மிக மோசமானது. இரண்டு மாநில அரசுகளின் ஒப்புதலோடு தான் அணை கட்டப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழக மக்களை பாதிக்கும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும்.
பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது. என்.டி.ஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பலவித தில்லுமுல்லுகளை செய்து இந்த வெற்றி ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிலான சலுகைகளை அறிவித்து தான் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. பீகார் தேர்தல் முடிவுகள் மொத்த கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவை எதிர்க்கக்கூடிய எல்லா கட்சிகளும் ஓரணியில் திரண்டு உறுதியான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. அதில் சிறு இடைவெளி ஏற்பட்டால் கூட இதனை பாஜக பயன்படுத்தும் ஆபத்து உள்ளது என்பதை அனைத்து கட்சிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்
திமுக அரசு 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். பல துறைகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதை இனியும் அரசு தள்ளிப் போடக்கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஒரு வாக்குக்கூட தவறக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மாநில செயலாளர் சண்முகம் தேர்தல் ஆணையரை சந்தித்து எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்துள்ளோம். பீகார் போல அவசரக் கதியில் எஸ்.ஐ.ஆர்-ஐ நடத்தி பல்லாயிரக்கணக்கான வாக்குகளை நீக்க அனுமதிக்க மாட்டோம்.





















