தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் 20-ஆம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.. எவற்றையெல்லாம் கண்டித்து போராட்டம்?
மத்திய அரசின் பல்வேறு செயல்களை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் செப்டம்பர் 20-ஆம் தேதி மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க.வின் கூட்டணியில் தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆட்சியில் இந்த கூட்டணி அமைந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்கள் இணைந்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது,
“காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, மத்திய அரசின் செயல்களை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 20-ந் தேதி காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிககள், தொண்டர்கள் ஆகியோர் தங்களது வீடுகளின் முன்பு கருப்புக்கொடியேந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலை ஏற்பட்ட அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்தாண்டு முதல் நாட்டில் பலரும் வேலைவாய்ப்புகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்து விற்கப்படுகிறது.
அதேபோல, சாமானிய மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் மட்டும் ரூபாய் 285 அதிகரித்து தற்போது ரூபாய் 900க்கு விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்கப்போவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தது போல மத்திய அரசும் குறைக்குமா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு வரி குறைப்பு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Sanjay Raut on Stalin: அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் - சிவசேனா எம்.பி