Sanjay Raut on Stalin: அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் - சிவசேனா எம்.பி
சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் கொள்கைகளில் ஒருவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி கூட உங்களுக்கு இல்லை என்று பாஜகவை மறைமுக விமர்சித்துள்ளார் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்.
இதுதொடர்பாக சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில் வாராந்திர பத்தியான 'ரோக்தோக்' அவர் எழுதிய கட்டுரையில், “இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அமைப்பால் வெளியிடப்பட்ட சுவரொட்டியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை தவிர்ப்பது மத்திய அரசின் "குறுகிய மனநிலையை" காட்டுகிறது. மத்திய அரசு ஏன் நேருவை மிகவும் வெறுக்கிறது. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR), கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு, நேரு மற்றும் மவுலான அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் படங்களை அதன் சுவரொட்டியில் இருந்து விலக்கியுள்ளது அரசியல் பழிவாங்கும் செயலாகும்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறாதவர்கள் மற்றும் வரலாற்றை உருவாக்குபவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் மாவீரர்களில் ஒருவரை ஒதுக்கி வைக்கிறார்கள். அரசியல் பழிவாங்கலுக்காகச் செய்யப்பட்ட இந்தச் செயல் நல்லதல்ல. அவர்களின் குறுகிய மனநிலையைக் காட்டுகிறது. இது, ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரையும் அவமதிப்பதாகும்.
சுதந்திரத்திற்குப் பிறகு நேருவின் கொள்கைகளில் ஒருவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. நேரு மிகவும் வெறுக்க அவர் என்ன செய்தார்?. உண்மையில், அவர் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், இப்போது இந்திய பொருளாதாரத்தை நகர்த்துவதற்காக விற்கப்படுகின்றன. நேருவின் "நீண்டகால தொலைநோக்கு" காரணமாக நாடு பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் பள்ளி பைகளில் இருந்து முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிச்சாமி ஆகியோரின் படங்களை அகற்றுவதில்லை என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் முடிவு எடுத்தார். இதன்மூலம், ஸ்டாலின் தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் (பாஜக பெயரை குறிப்பிடாமல்) ஏன் நேருவை மிகவும் வெறுக்கிறீர்கள்?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, வாத்ரா ஆகியோரை மோடி அரசு விமர்சிப்பது புரிந்துகொள்ளத்தக்கது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயரை மாற்றுவதன் மூலம் மத்திய அரசு தனது வெறுப்பை பகிரங்கப்படுத்தியது. தேசத்தைக் கட்டமைப்பதில் நேரு மற்றும் இந்திரா காந்தியின் அழியாத பங்களிப்பை நீங்கள் அழிக்க முடியாது. நேருவின் பங்களிப்பை மறுப்பவர்கள் வரலாற்றின் வில்லன்கள் என்று அழைக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.