Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
”விளையாட்டு என்பது வெறும் போட்டி அல்ல; அது சமூக ஒற்றுமையின் அடையாளம் ; சமூக நீதியை மையமாகக் கொண்ட திராவிடக் கொள்கையின் வழியில் தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையை முன்னேற்றி வருகிறது”

இதுவரை இல்லாத அளவு விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கி, அந்த துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது என்றும் விளையாட்டுத் துறையிலும் எல்லோர்க்கும் எல்லாம் என்ற திராவிட கொள்கையை புகுத்திய காரணத்தால் இன்று தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் ஜொலித்துக்கொண்டிருப்பதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையில் கட்டுரை எழுதிய உதயநிதி
ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள துணை முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சேம்பியன்ஸ் ஃபவுண்டேஷனுக்காக தான் மேற்கொண்ட பயணத்தில் எண்ணற்ற சாதனை மனிதர்களை சந்தித்தாகவும் அவற்றில் மதுரையை சேர்ந்த மனோஜின் கதை தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பாரா ஒலிம்பிக் வீரராக மனோஜ் முன்னர் TANSI எனப்படும் அரசு துறையில் தற்காலிக பணியாளராக பணீயாற்றி வந்தார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் அவரின் திறமையை கண்டுபிடித்து, அவருக்கு நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தியதால் இன்று சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். அதோடு, அவரது தற்காலிக பணியை 3% இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரந்தர அரசு வேலையாக அவருக்கு திமுக அரசு மாற்றிக் கொடுத்திருக்கிறது என்றும் துணை முதலமைச்சர் தன்னுடைய அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தடைகளை தகர்த்த திமுக அரசு
அதேபோன்று சிந்தாந்த கொள்கைகள் கொண்ட தலைவர்களின் வழி நடத்தப்படும் திராவிட மாடல் அரசு மூலமாக ஊரக பகுதிகளில் தகுதிவாய்ந்த இளைஞர்கள் விளையாட்டில் வெற்றிபெறுவதற்கு இருந்த தடைகள் தற்போது தகர்த்தெறியப்பட்டிருக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொள்கை முழக்கமான ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற அடிப்படை எங்களுடைய விளையாட்டுத் துறைக்கு ஒரு வழிகாட்டுதலாக விளங்கி வருகிறது.
விளையாட்டு துறையில் திராவிட அல்கார்ஃதம்
திறமையான விளையாட்டு வீரர்களை உடனுக்குடன் கண்டறிவது, தமிழ்நாடு முழுவதும் விளையாட்டுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தி உருவாக்குவது, அறிவியல் பூர்வமாக விளையாட்டு வீரர்களை தயார் செய்வது என விளையாட்டுத் துறை திமுக ஆட்சியில் அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. அதே நேரத்தில், விளையாட்டில் வெற்றி பெறுபவர்களை எந்த தாமதமும் இன்றி திமுக அரசு உடனுக்குடன் அங்கீகரித்து வருவதாகவும் உதயநிதி தன்னுடைய கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
மேலும், இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத வகையில் திராவிட அல்கார்ஃதம் என்பதை விளையாட்டுத் துறையின் கொள்கை மற்றும் நடைமுறையில் திமுக அரசு புகுத்தியுள்ளதாகவும் இது விளையாட்டுத் துறையின் மைல்கல் என்றும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் தமிழ்நாடு
மேலும், தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் சாதனனைகளை புரிந்து வருகின்றனர் என்றும் உலக சதுரங்க போட்டிகளில் 34 இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர்கள், 2 உலக சாம்பியன்கள் உருவாகியுள்ளன.ர் அதேபோல் பாராலிம்பிக் மற்றும் ஏஷியன் பாரா விளையாட்டுகளில் பல பதக்கங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டுகளில் 46 தமிழக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு 28 பதக்கங்கள் பெற்றுள்ளனர். பாரா ஆசிய விளையாட்டுகளில் 18 பேரில் 15 பேர் பதக்கம் பெற்றனர்.
கேலோ இந்திய விளையாட்டுகளில் 2025க்குள் 74 பதக்கங்களை இலக்காக வைத்து, 2023ல் வரை 42 பதக்கங்களை பெற்றுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 800 கோடிக்கு மேல் தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.
வளர்ச்சி மற்றும் முதலீடு
கடந்த 5 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கு அரசு ரூ. 21,945 கோடி ஒதுக்கி உள்ளது — இது 143% உயர்வாகும். 2021 முதல், 28 புதிய விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு விளையாட்டு மையங்கள், உயர்நிலை பயிற்சி மையங்கள், ஹாக்கி மைதானங்கள், சர்வதேச அளவிலான உள் விளையாட்டு அரங்குகள் என புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கலைஞர் விளையாட்டு உபகரணத் திட்டம் மூலம் 75 தொகுதிகளில் கிரிக்கெட் பேட், வாலிபால் நெட்கள், ஹாக்கி கம்பிகள் போன்ற விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் புதிய விளையாட்டு அரங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தகவல்களைக் களத்தில் இருந்து சேகரித்து, தகவல் சார்ந்த மற்றும் வெளிப்படையான முறையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை பெற்று வருகின்றனர் என்று அந்த கட்டுரையில் பெருமையோடு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் – அறிவித்தார் உதயநிதி
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை நவீனமயமாக்கி, அதில் உயிரியல், ஊட்டச்சத்து, உளவியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில், சென்னையில் “Tamil Nadu Centre for Sports Excellence” என்ற ’Global Sports City' உருவாக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கட்டுரையில் அறிவித்துள்ளார்.
மேலும், விளையாட்டு என்பது வெறும் போட்டி அல்ல; அது சமூக ஒற்றுமையின் அடையாளம் என்றும் சமூக நீதியை மையமாகக் கொண்ட திராவிடக் கொள்கையின் வழியில் தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையை முன்னேற்றி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வெற்றியின் அளவுகோல் பதக்கங்கள் அல்ல; ஒவ்வொரு பகுதியிலும் இருந்து குழந்தைகள் மேடை ஏறும் அளவுக்கான வாய்ப்பு உருவாக்குவதுதான் என்று குறிப்பிட்டு, அதுவே தங்களின் உண்மையான சாதனையாக இருக்கும் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.






















