Annamalai: "நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம்" அண்ணாமலை திட்டவட்டம்!
"தமிழக முதல்வரே இங்கு வந்து தங்கியிருந்தாலும் பாஐக தான் வெற்றி பெறும். திமுகவின் எல்லா அமைச்சர்களும் வரட்டும் நாங்கள் தயார்"
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அக்கட்சியின், மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”கோவை பாராளுமன்ற தொகுதியில் மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது. 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்திற்கும், மறுபுறம் தர்மத்திற்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து தங்கியிருந்தாலும் பாஐக தான் வெற்றி பெறும். திமுகவின் எல்லா அமைச்சர்களும் வரட்டும் நாங்கள் தயார். டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை. தமிழக அரசியலில் தான் விருப்பம்.
மோடி உத்தரவிட்டதால் தேர்தலில் போட்டியிடுகிறேன். 2026 பாஜக ஆட்சி அமைக்கும் பொழுது எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கின்றது என்பதை காட்ட வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜக உறுப்பினர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்.
மோடியின் உத்தரவிற்கு நான் கட்டுப்பட்டவன். என்னுடைய அரசியல் தமிழகத்தில் இருக்க வேண்டும். மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது 2026ல் ஆட்சிக்கு வருவதற்காகதான். கோவையை அடிப்படையிலிருந்து மாற்ற வேண்டும். வளர்ச்சி என்றால் என்ன என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவே போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டு அரசியலில் தான் இருப்பேன். டெல்லி அரசியல் எனக்கு பிடிக்காது.
தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும்:
தமிழகத்தில் 2026 ல் ஆட்சி வரவேண்டும். பிரதமருக்கு 80 சீட் உத்தரபிரதேசத்தில் இருக்கிறது. இன்னும் அவர் அந்த பக்கம் போகவில்லை. வடமாநிலங்கள் பக்கம் இன்னும் போகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏதாவது ஒரு தலைவர் வெளிநாட்டு பயணம் போய் இருப்பார்களா? 2024ல் கிடைக்கும் எம்பி மூலம் 700 நாட்கள் களப்பணியாற்றுவோம். அதனை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் இருப்பதெல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கை. 2026 ல் பெட்ரோல் டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள். டாய்லட் பேப்பர் இல்லை என்றால், திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள். 2019 ல் கொடுத்த 295 வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டு, 2024 தேர்தலுக்கு வந்திருக்கின்றோம்.
தேர்தல் விதிமீறல்:
எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது. பிரச்சாரத்தின் பொழுது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு, கோபாலபுரத்தோடு தான் என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது. மற்ற வேட்பாளர்கள் என்ன வேண்டுமானும் சொல்லட்டும். கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கின்றோம். செலவு குறைந்த தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். அடுத்த 40 நாட்கள் பூத கண்ணாடி போட்டு ஊடகங்கள் எங்களை பார்க்க வேண்டும். 33 மாதமாக சம்பாதித்த ஆயிரக்கணக்கான பணத்தை இங்கு வந்து திமுகவினர் செலவு செய்வார்கள. பா.ஜ.க ஒரு தேர்தல் விதிமீறலில் கூட ஈடுபடாது.
தமிழக அரசியலில் மாற்றத்தை கோவை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு வருவோம். எங்களது 19 வேட்பாளர்கள் பெயர்களை பாருங்கள். அவர்களது தகுதிகளை பாருங்கள். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கின்றதா என்பதை பார்க்கவும். பிற கட்சிகளில் வலை வீசி வேட்பாளர்களை தேடுகின்றனர். மாற்றுகின்றனர். இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றுவார்கள். தருமபுரி வேட்பாளராக சௌமியா அன்புமணி நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். சுற்றுச்சூழலில் நிறைய பணிகளைச் செய்திருக்கிறார். எல்லோருடைய அனுபவம் தமிழக அரசியலுக்கு வரவேண்டும். அதன் மூலம் தமிழகத்துக்கு வளர்ச்சி இருக்க வேண்டும். சௌமியா அன்புமணிக்கு வாழ்த்துகள்.
பிரதமர் ஒரு விஸ்வகுரு:
2024 தேர்தலில் தமிழக முழுவதும் வளர்ச்சி பணியை கொண்டு வர வேண்டும். பாரத பிரதமரின் ரோடுஷோவில் லட்சக்கணக்கானோர் பார்க்க வருகின்றனர். அந்தப் பகுதியில் விடுமுறை கொடுத்திருக்கின்றார்கள். அந்த குழந்தைகள் விடுமுறை கொடுக்கப்பட்டதால் தங்களுடைய பிரதமரை பார்ப்பதற்கு வந்திருக்கின்றனர். பிரதமர் வரும் பாதையில் விடுமுறை அளித்த பிறகு மாணவச் செல்வங்கள் பிரதமர் பார்ப்பதற்காகதான் வந்தார்கள். பாரதப் பிரதமரை பெட்டிக்கடை அரசியல்வாதி மாதிரி பார்க்காதீர்கள். அவர் விஸ்வ குரு. பள்ளி குழந்தையை நாங்கள் போய் அழைத்து வரவில்லை” எனத் தெரிவித்தார்.