குடும்பத்தையே பிரித்த ஆதவ் அர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
சரித்திர பதிவேடு குற்றவாளி போன்றவர் ஆதவ் அர்ஜுனா, எங்கள் வீட்டில் தொடங்கி திமுக, விசிக என தொடர்ந்து தற்போது தவெகவிலும் தன்னை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருவதாக சார்லஸ் மார்ட்டின் விமர்சித்துள்ளார்.

ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் பயணம்
தேர்தல் வியூக நிபுணர், விளையாட்டு நிர்வாகி என ஆதவ் அர்ஜூனா பல பொறுப்புகளில் இருந்தாலும் தமிழக வெற்றிக்கழகத்தில் தலைவர் விஜய்க்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து வருகிறார். திமுகவின் வெற்றிக்காக தேர்தல் வியூக வகுப்பாளராக தனது பணியை தொடங்கிய ஆதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து செயல்பட்டார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டவருக்கு திமுக சார்பில் சீட் ஒதுக்க மறுக்கப்படது. இதனால் திமுக மீது கடும் அதிருப்தியில் இருந்தவர், கூட்டணி கட்சியான திமுகவையே விளாசியெடுத்தார். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் நடிகர் விஜய்யின் தவெவில் இணைந்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனாவால் குடும்பத்தில் பிரச்சனை
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனரும் தொழிலதிபர் மார்ட்டினின் மகனுமான சார்லஸ், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆதவ் எங்கள் குடும்பத்திற்கு வந்ததும் பிசினஸை கைப்பற்ற வேண்டுமென திட்டமிட்டார். எங்கள் அனைத்து நிறுவனங்களையும் ஓவர் டேக் பண்ண வேண்டும் என முயற்சி செய்தார். இதனால் எங்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது. முதலில் குடும்பத்தில் சண்டையை உருவாக்கினார். இதனால், எனக்கும் அப்பாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவரால் இரண்டு வருடம் நான் தனியாக பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தலைவரை மீறி செயல்படும் ஆதவ் அர்ஜூனா
அடுத்ததாக திமுகவிற்கு சென்றவர் அங்கு ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனுக்கும், மகன் உதயநிதிக்கும் இடையே மோதலை ஏற்படுத்த நினைத்தார். குடும்பத்திற்குள் பிரச்னையை உருவாக்க முயற்சித்தார். ஒரு கட்டத்தில் கட்சியை கையில் எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்த நினைத்த அவரை அவர்களே அங்கிருந்து வெளியேற்றினர். அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்ற ஆதவ், அங்கும் திருமாவளவனையே தாண்டிட வேண்டும் என்று செயல்பட்டார்.
சரித்திர பதிவேடு குற்றவாளியை போன்றவர் ஆதவ்
கட்சியின் தலைவரை மீறி தனது இஷ்டத்துக்கு முடிவுகளை எடுத்தார். இதனால் நிர்வாகிகள் எதிர்ப்பால் அங்கிருந்து நீக்கப்பட்டார். தற்போது தவெகவிற்கு வந்துள்ளார். அங்கும் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். தான் மட்டும் தான் இருக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார். இதையே தனது திட்டமாக கொண்டு செயல்படுகிறார். சரித்திர பதிவேடு குற்றவாளி போன்றவர் ஆதவ் அர்ஜுனா, எங்கள் வீட்டில் தொடங்கி திமுக, விசிக என தொடர்ந்து தற்போது தவெகவிலும் இதேபோல செயல்பட்டு வருகிறார்.





















