TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
TVK VIJAY: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பொதுச் சின்னம் கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 150 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறியாக வைத்து களத்தில் இறங்கியுள்ள விஜய், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் திட்டமிட்டவர் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய், கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததன் காரணமாக அடுத்த கட்சி மக்கள் சந்திப்பு நிகழ்சிகள் நடத்தப்படாமல் தடைபட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இழப்பீடும் வழங்கப்பட்டது. அடுத்ததாக தவெக பொதுக்குழு கூட்டத்தை நடத்திய விஜய், திமுக அரசுக்கு எதிரான தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். அடுத்ததாக 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இன்று முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது.
சின்னம் கேட்டு அரசியல் கட்சிகள் விண்ணப்பம்
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகளுக்கு சட்டப்பேரவை மற்றும் பல்வேறு தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் திமுக உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக இரட்டை இலை சின்னத்திலும், விடுதலை சிறுத்தைகள் பானை சின்னத்திலும், நாம் தமிழர் மைக் சின்னத்திலும் போட்டியிடவுள்ளது. அதே நேரம் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் காலம் முடியவடையும் நாளில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்.
தவெக சார்பில் கேட்கப்படும் சின்னம் என்ன.?
இதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் இன்று முதல் ( நவம்பர் 11ம் தேதி ) பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். 184 சின்னங்கள் பட்டியலிடப்படும். தங்களுக்கு தேவையான சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் முதலில் வருபவர்களுக்கு முன்னூரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்,
இந்த நிலையில் தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய், சின்னம் கேட்டு தவெக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சி குறைந்தபட்சம் 5 முதல் 10 சின்னங்கள் வரை விண்ணப்பிக்கலாம். எனவே தவெக சார்பில் மக்கள் மனதில் பதியும் வகையில் ஆட்டோ, விசில், விளக்கு, கிரிக்கெட் பேட், தீபம், வைரம், மோதிரம் உள்ளிட்ட சின்னங்களை பட்டியலிட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





















