ஐடி ரெய்டுக்கெல்லாம் பயந்திருந்தால் திமுக செத்து புல் முளைத்திருக்கும் - துரைமுருகன்..
மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. ரெய்டு நடத்துவதால் மு.க.ஸ்டாலின் தளர்ந்துவிடுவார் என்று மத்திய அரசு தப்புக்கணக்கு போடுகிறது என்று துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
![ஐடி ரெய்டுக்கெல்லாம் பயந்திருந்தால் திமுக செத்து புல் முளைத்திருக்கும் - துரைமுருகன்.. central government wrong calculation for IT raid ஐடி ரெய்டுக்கெல்லாம் பயந்திருந்தால் திமுக செத்து புல் முளைத்திருக்கும் - துரைமுருகன்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/02/d9cf298ec683eb9a334f1f76f7f1f22d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு கட்சியும் தங்கள் பணிகளை வேகமாக முடித்து வாக்குச்சாவடிகளை நோக்கிச் செல்லும் காலகட்டத்தில், திடீரென்று மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருப்பது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுவதாகவே நான் அறிகிறேன். தேர்தல் நெருக்கத்தில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்தினால், ஸ்டாலினோ, அவரின் குடும்பமோ, தி.மு.க.வோ அதிர்ச்சியடைந்துவிடுவார்கள், தேர்தலில் தளர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்ற ஒரு தவறான கணக்கை மத்திய அரசு போட்டிருக்கிறது.
ரெய்டு பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் அல்ல தி.மு.க. மிசா காலத்தில், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் இல்லத்தில் இதே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் உள்ளே சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். தலைவர் வெளியே உட்கார்ந்து உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதிக் கொண்டிருந்தார்.
அதைக்கூடப் பொருட்படுத்தாமல் வேண்டுமென்றே அந்த சோதனை செய்து கொண்டிருந்தவர்களுள் சில பேர், அதிலும் சென்னையில் இருந்தவர்கள் 'உங்கள் பேர்தான் கபாலியா? நீங்கள் இந்த வீட்டுக்கு என்ன வேண்டும்?' என்று கேலியாகப் பேசியதைக்கூட ஒரு காதில் வாங்கிக்கொண்டு மறுகாதில் விட்டுவிட்டு அஞ்சாமல் உடன்பிறப்புக்கு மடல் எழுதிய மகத்தான மடல் எழுதிய தலைவரின் மகன்தான் மு.க.ஸ்டாலின்.
தந்தையை விட வலிமையானவர்
அவர் தந்தையை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர். எனவே, அவரை பயமுறுத்திவிடலாம், தி.மு.க.வை பயமுறுத்திவிடலாம், திமுக தேர்தலில் கலகலத்துப் போய்விடும் என்று நினைத்தால் இதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. சமீபத்தில்தான் எ.வ.வேலு வீடுகள், மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. அது முடிவதற்குள் செந்தாமரை இல்லத்தில் சோதனை செய்தால் எல்லாக் கட்சிகளும் நடுங்கிவிடுவார்கள் என நினைக்கக் கூடாது. இத்தகைய போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பது ஜனநாயகமல்ல. நாணயமான அரசியலும் அல்ல, இதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அடக்குமுறைக்கு, சிறைச்சாலைக்கு, தண்டனைகளுக்கு, இப்படிப்பட்ட ரெய்டுகளுக்கு திமுக பயந்திருந்தால், திமுக என்றைக்கோ செத்துப்போய் அந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.
கண்துடைப்பு
ஸ்டாலினின் செல்ல மகள் செந்தாமரை. ஸ்டாலின் செந்தாமரையிடம் அபரிமிதமான அன்பு கொண்டவர். அந்தக் குழந்தை வருத்தப்பட்டால் தலைவர் தாங்கமாட்டார் என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம். வீறுகொண்டு எழுந்து நிற்கக்கூடிய வீர சிங்கம் எங்கள் தலைவர். இத்தகைய போக்கை எந்த அரசாங்கமாக இருந்தாலும், கடைப்பிடிக்கக்கூடாது. ஜனநாயக நாட்டில் இத்தகைய போக்கு வளர்வது உகந்ததல்ல.
தி.மு.க.வினர் வீடுகளில் சோதனை செய்வது பயமுறுத்துவதற்கு. மற்ற கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துவது கண்துடைப்பு. எப்படியாவது தமிழ்நாட்டில் ஒரேயொரு இடத்திலாவது வெற்றி பெற்று காலூன்றிவிட மாட்டோமா என்கிற ஒரு ஆதங்கம்தான் பா.ஜ.க.வுக்கு இருக்கிறது. ஆனால், இப்படிச் செய்யக் கூடாது” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)